இந்தியா

பென்டகனை விஞ்சிய குஜராத் வைர வணிக மையம்! உலகின் ஆகப் பெரிய வளாகம்!

DIN


உலகிலேயே மிகப்பெரிய அலுவல் கட்டடம் என்ற பெயர் பெற்ற அமெரிக்க ராணுவ அலுவலகமான பென்டகனையே விஞ்சி நிற்கிறது குஜராத் வைர வணிக மைய கட்டடம்.

அமெரிக்காவை ஒரு விஷயத்தில் இந்தியா முந்தியிருக்கிறது. அதுவும் சாதாரண விஷயமல்ல.. உலகிலேயே மிகப்பெரிய அலுவல் வளாகம் என்ற பெருமையை இதுவரை பென்டகன் பெற்றிருந்த நிலையில், அதனை பின்னுக்குத் தள்ளிவிட்டு, சூரத்தில் அமைந்திருக்கும் குஜராத் வைர வணிக மைய கட்டடம் முதலிடம் பிடித்திருக்கிறது.
 
உலகில் உற்பத்தியாகும் மொத்த வைரத்தில், 90 சதவிகித வைரம் சூரத் நகரில்தான் செரிவூட்டப்படுகின்றன. அப்படிப்பட்ட சூரத் நகரின் மகுடமாக இந்த அலுவல் வளாகம் சேர்ந்திருக்கிறது.

35 ஏக்கர் நிலப்பரப்பில், 15 மாடிகளைக் கொண்ட அலுவல் கட்டடங்களைக் கொண்ட வளாகம் இங்கு நிறுவப்பட்டுள்ளது. வைர வணிக மையத்தின் கட்டமைப்பு கிட்டத்தட்ட 71 லட்சம் சதுர அடி பரப்பளவுக்கு கட்டடம் அமைந்துள்ளது. இதனால்தான், இந்த வணிக சந்தை மையம் பென்டகன் அலுவலகக் கட்டடத்தை உலகின் மிகப் பெரிய அலுவல் வளாகம் என்ற பெருமையிலிருந்து கீழே இறக்கியிருக்கிறது.

சூரத் வைர வணிகச் சந்தையைப் பாராட்டியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த வளாகத்தில் அமைந்துள்ள கட்டடங்களின் கட்டடக்கலை சூரத்தின் வைரத் தொழில் அடைந்திருக்கும் சுறுசுறுப்பையும் வளர்ச்சியையும் காட்டுகிறது என்றார். மேலும், இதன் மூலம் நாட்டில் உள்ள தொழில்முனைவோரின் ஆர்வத்துக்கு ஒரு சான்றாக அமைந்திருப்பதாகவும், இந்த மையம், வணிகம், புதுமைகளை அறிமுகப்படுத்துதல், ஒருங்கிணைப்பு, நாட்டின் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்துவது, அதிக வேலை வாய்ப்புகளை பெருக்குவது உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைர வணிக மைய வளாகம் நவம்பர் மாதத்திலிருந்து செயல்படத் தொடங்கும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி இந்த வளாகத்தை திறந்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது.

சர்வதேச அளவில் கட்டட வடிவமைப்புப் போட்டிகளை எதிர்கொண்டு, இந்தியாவின் மோர்போஜெனிசிஸ் நிறுவனத்தால் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வைர வணிக மையத்தால் ஆயிரக்கணக்கான வணிகர்கள் மும்பைக்கு ரயில் மூலம் சென்று வணிகம் செய்வது குறைக்கப்படும் என்றும் வைர வணிக மையக் கட்டட திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் கதாவி தெரிவித்துள்ளார்.

ரூ.3,200 கோடிச் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வைர வணிக மையத்தில் 131 மின்தூக்கிகள், சில்லறை விற்பனைக் கூடங்கள், உணவகங்கள், அரங்குகள் என பல வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது.

4,700 அலுவலகங்கள் செயல்படும் வகையில் இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் எந்த நுழைவாயிலில் இருந்தும் வெறும் 7 நிமிடங்களில், எந்த அலுவலகத்தையும் அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு.

இந்த கட்டடத்தின் பாதி அறைகள், இயற்கை முறையில் குளிரூட்டப்படும் வகையிலும், சூரிய மின் சக்தி மூலம் இயங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT