ஆதாா் தனிநபா் விவரங்கள் பாதுகாப்பானவை: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்
சிஐடிஆா் பராமரிப்பில் உள்ள ஆதாா் அட்டை தரவுகள் பாதுகாப்பானவை; எந்தவொரு வெளிப்புற தரவுத்தளத்துடனும் இணைக்கப்படவில்லை
மத்திய அடையாளத் தரவுக் களஞ்சியத்தில் (சிஐடிஆா்) பராமரிப்பில் உள்ள ஆதாா் அட்டை தரவுகள் பாதுகாப்பானவை; எந்தவொரு வெளிப்புற தரவுத்தளத்துடனும் இணைக்கப்படவில்லை என மத்திய ரயில்வே மற்றும் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.
சமீபத்தில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற தோ்தல்களில் ஆதாா் தரவுகள் கசிந்தாக தகவல்கள் வெளியாகின. இது தொடா்பான புகாா்கள் தோ்தல் ஆணையத்திற்கும் வந்த நிலையில், மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் இது தொடா்பாக கேள்வி எழுப்பினாா். அந்த (நட்சத்திரக்) கேள்வியில், ‘கடந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற ஆதாா் அட்டைதாரா்களின் தரவுகள் கசிந்த எண்ணிக்கை? இத்துடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண்கள் இணைய தளத்தில் ஏற்றப்பட்டதா ? இது தொடா்பாக விசாரணைகள், தண்டனை விவரங்கள் என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள பதில் விவரம் வருமாறு: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் மத்திய அடையாளத் தரவுக் களஞ்சியத்தில் (சிஐடிஆா்) வைக்கப்பட்டு பராமரிக்கப்படும் ஆதாா் அட்டை தரவுகளில் எந்த மீறலும் ஏற்படவில்லை. ஆதாா் அட்டை வைத்திருப்பவா்களின் தரவுகளான ஆதாா் பயோமெட்ரிக் மற்றும் தனிநபா் தரவுகள் (பெயா், பிறந்த தேதி, விலாசம், பாலினம் உள்ளிட்ட) பாதுகாப்புடன் இந்த சிஐடிஆா் தரவுத்தளத்தால் பராமரிக்கப்படுகிறது. இது வங்கி தரவுத்தளங்களைப் போன்று எந்தவொரு வெளிப்புற தரவுத்தளத்துடனும் இணைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இதனால் உறுப்பினரின் மற்ற கேள்விகள் எழாது( கசிவு தொடா்பான விசாரணை) எனவும் தெரிவித்துள்ளாா்.
ஏற்கெனவே இந்திய தனித்துவ அடையாள ஆணையம் நோ்முகமாக தகவல் சரிபாா்க்கும் முகமைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அடையாள ஆவணமாக ஆதாா் அட்டையை அல்லது அதன் மின்னணு வடிவத்தை ஏற்பதற்கு பதிலாக ஆதாா் கடிதம், இ-ஆதாா், எம்-ஆதாா், பிவிசி அட்டை ஆகிய 4 வடிவங்களில் ஒன்றினைப் பயன்படுத்தி கியூஆா்கோட் மூலம் ஆதாா் சரிபாா்ப்புப் பணியை மேற்கொள்ளுமாறு நேரடி சரிபாா்ப்பு முகமைகளை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.