வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் சூழ்நிலையை கையாள உள்துறை அமைச்சர் அமித் ஷாவே போதும் எனவும், பிரதமர் மணிப்பூருக்கு செல்ல வேண்டுமென்று அவசியமில்லை எனவும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
சிவசேனையின் தலைவர் மற்றும் மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி மணிப்பூருக்கு சென்று அங்கு அமைதியைக் கொண்டுவராமல் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டது ஏன் என கேள்வியெழுப்பியதற்கு பதிலளிக்கும் விதமாக இதனை தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தின் சதாரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியினால் கரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது முயற்சியால் இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களுக்கு கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. இல்லையெனில், கோடிக்கணக்கான மக்கள் இறந்திருக்கக் கூடும். மகாராஷ்டிரத்தில் உள்ள தலைவர் ஒருவர் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் ஏன் அமெரிக்காவுக்கு செல்கிறார் எனக் கேட்கிறார். அவருக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மணிப்பூர் சூழலைக் கையாள உள்துறை அமைச்சர் அமித் ஷாவே போதுமானவர். அதனால், பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல வேண்டுமென்ற அவசியமில்லை. நீங்கள் உங்களது இருப்பிடத்தில் இருந்து அருகிலுள்ள புறநகர் பகுதிகளுக்கு கூட செல்ல மாட்டீர்கள். நீங்கள் பிரதமர் மோடியை மணிப்பூருக்கு செல்ல சொல்கிறீர்கள். இது குறித்து பேவதற்கு கூட எந்த ஒரு உரிமையும் உங்களுக்கு இல்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.