ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசா தமிழக ஐஏஎஸ் கார்த்திகேயன் பாண்டியன்?
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் உருவாகி வருகிறாரா என்ற ஊகங்கள் எழுந்திருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக, தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகேயன் பாண்டியன் உருவாகி வருகிறாரா என்ற ஊகங்கள் எழுந்திருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
காரணம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி போல அல்லாமல், கார்த்திகேயன் பாண்டியனின் வருகையும், திடீர் ஆய்வுகளும் அந்த அளவுக்கு பிரமாண்டமாக்கப்படுவதுதான் என்கிறார்கள் தகவல் அறிந்த வட்டாரங்கள்.
ஐஏஎஸ் அதிகாரியான கார்த்திகேயன் பாண்டியன், ஓரிடத்துக்கு வருகிறார் என்றால், அங்கு நடக்கும் முன்னேற்பாடுகளைப் பார்க்கும் போது அமைச்சர்களே வாயடைத்துப் போகும் அளவுக்கு இருக்கிறதாம்.
2000ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்தவர் வி. கார்த்திகேயன் பாண்டியன் ஐஏஎஸ். அவர் எப்போதும் ஒரு சாதாரண அதிகாரிகளைப் போல இருந்ததே இல்லை. ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர். எப்போதும் கூடுதல் அதிகாரங்களுடன் இருப்பவர்.
ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் 23 ஆண்டு கால ஆட்சியில், கார்த்திகேயன் பாண்டியனின் அதிகாரமும், ஆளுமையும் அதிகரித்தும், மெருகேரியுமே வந்திருக்கிறது. பொது நிகழ்ச்சிகளில் எப்போதும் பட்நாயக்குடன் காணப்படும் இவர், அமைச்சர்கள் கூட, முதல்வரை அணுகுவதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் கொண்டவராக மாறியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, தற்போதெல்லாம், ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அவ்வப்போது கார்த்திகேயன் பாண்டியனின் திடீர் வருகைகள் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும், இதுவரை பட்நாயக்குடன் எப்போதும் காணப்படும் இவர், தற்போதெல்லாம் தனிப்பட்ட முறையிலும் இவர் மீது ஊடக வெளிச்சம் படும் வகையிலும் நடந்து கொள்வதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஒடிசா மாநிலத்தில் பாண்டியன் நடத்தும் கூட்டங்கள், மனுக்களைப் பெற்றுக்கொள்ளுதல், மக்களிடயே உரையாற்றுதல், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என அனைத்துமே பேசுபொருளாகவும் விவாதங்களாகவும் மாறிவிட்டனவாம்.
இவையெல்லாம் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாகவே இவர் மாறிவருவதாக ஊகங்கள் ஊடகங்களில் வெளியானாலும், நவீன் பட்நாயக் அரசின் கொள்கைகளையே கார்த்திகேயன் பாண்டியன் நிறைவேற்றி வருவதாக கட்சியினர் கூறுகிறார்கள்.
மிகப்பெரிய சக்தியாக பாண்டியன் மாறிவருவதாக மூத்த பாஜக தலைவர் ஒருவரே கூறியிருப்பதாகவும், ஆனால், அது அவரால் நிச்சயமாக முடியாது எனறும் அவர் தெரிவித்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
ஏற்கனவே, ஒடிசா முதல்வர் பட்நாயக், தனக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒருவரை, மாற்று சக்தியாக உருவெடுத்து வருவதை அறிந்ததுமே, கட்சியிலிருந்து தூக்கி வீசியதாகவும், எனவே, அந்த எல்லை எதுவரை என்பது பட்நாயக்குக்கு தெரியும் என்றும் கட்சிக்குள் சிலர் காதுபடப் பேசி வருகிறார்கள்.