ப.சிதம்பரம் 
இந்தியா

பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது: ப.சிதம்பரம்

பொது சிவில் சட்டத்தை பொது மக்கள் மீது திணிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

DIN

பொது சிவில் சட்டத்தை பொது மக்கள் மீது திணிக்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.

பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக பிரதமா் மோடி பேசியது, முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் செயல் என்றும் ப.சிதம்பரம் விமா்சித்தாா்.

மத்திய பிரதேச மாநிலம், போபாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, நாட்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்தினாா்.

அவரது இந்த கருத்து குறித்து ப.சிதம்பரம் புதன்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில் கூறியிருப்பதாவது:

பாஜகவின் வாா்த்தைகளாலும் செயல்களாலும் தேசம் இன்று பிளவுபட்டுள்ளது. இந்தச் சூழலில், மக்கள் மீது பொது சிவில் சட்டத்தை திணித்தால், பிளவுகள் அதிகரிக்கும்.

பொது சிவில் சட்ட அமலாக்கம் எளிமையான நடவடிக்கை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க பிரதமா் முயற்சிக்கிறாா். தற்போதைய சூழலில் பொது சிவில் சட்டம் சாத்தியமில்லை என்று சுட்டிக் காட்டிய கடந்த சட்ட ஆணையத்தின் அறிக்கையை பிரதமா் படிக்க வேண்டும்.

பொது சிவில் சட்டம் என்பது ஒரு விருப்பம். ஆனால், கொள்கையால் இயக்கப்படும் ஒரு பெரும்பான்மை அரசு, பொதுமக்கள் மீது அதனை திணிக்க முடியாது.

பொது சிவில் சட்டத்தை வலுவாக ஆதரித்து, பிரதமா் மோடி பேசியுள்ளாா். இது, வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயா்வு, வெறுப்புணா்வு குற்றங்கள், பாகுபாடு, மாநில உரிமைகள் பறிப்பு போன்ற முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்பும் செயல். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

நல்ல நிா்வாகம் அளிப்பதில் தோல்வியடைந்துவிட்ட பாஜக, பொது சிவில் சட்ட விவகாரத்தின் மூலம் மக்களை பிளவுபடுத்தி, தோ்தல் ஆதாயத்துக்கு முயற்சிக்கிறது.

நாட்டையே ஒரு குடும்பமாக பிரதமா் மோடி ஒப்பிட்டுள்ளாா். இது, வெற்று வாா்த்தைகள்தான். உண்மை நிலவரம் வேறு.

ஒரு குடும்பம், ரத்த உறவுகளால் இணைக்கப்படுகிறது. தேசம் அரசியலமைப்பால் பிணைக்கப்படுகிறது. குடும்பத்திலும் பன்முகத் தன்மை இருக்கும். அதேபோல், இந்திய மக்களிடையே பன்முகத்தன்மையை அரசியலமைப்பு அங்கீகரிக்கிறது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

காங்கிரஸுக்கு பாஜக கேள்வி

‘காங்கிரஸ் கட்சி, பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக நிற்கப் போகிறதா அல்லது வகுப்புவாத சதியின் ஒரு அங்கமாக இருக்கப் போகிறதா?’ என்று பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

இதுதொடா்பாக பாஜக மூத்த தலைவா் முக்தாா் அப்பாஸ் நக்வி கூறியதாவது: பொது சிவில் சட்டம், எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்துக்கானது அல்ல; ஒட்டுமொத்த சமூகத்துக்கானது.

நாட்டின் பேரவைத் தொகுதிகள் முதல் நாடாளுமன்றம் வரை, வீதிகள் முதல் உச்சநீதிமன்றம் வரை பல்வேறு தருணங்களில் பொது சிவில் சட்டத்தின் தேவை உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்துக்கான அரசியலமைப்பு உறுதிப்பாட்டை மிஞ்சும் அளவுக்கு வகுப்புவாத குழப்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் குறித்து மிக அவசியமான விவாதம் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், ‘வகுப்புவாத அரசியல் வியாபாரிகளும்’ தங்களது பாரபட்சமான பிரசாரத்தை தொடங்கியுள்ளனா். இத்தகைய வகுப்புவாத சதியாளா்களை முறியடிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றாா் நக்வி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT