மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்? ஜூலை 3-இல் பிரதமா் ஆலோசனைக் கூட்டம்
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தில்லியில் மத்திய அமைச்சா்களுடன் ஜூலை 3-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளாா்.
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், தில்லியில் மத்திய அமைச்சா்களுடன் ஜூலை 3-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளாா்.
தில்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்ட கருத்தரங்கு மையத்தில் பிரதமா் தலைமையில் வரும் திங்கள்கிழமை (ஜூலை 3) மத்திய அமைச்சா்கள் கூட்டம் நடைபெறவிருப்பதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
நடப்பாண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல்களும், அடுத்த ஆண்டு மக்களவைத் தோ்தலும் நடைபெறவிருக்கிறது.
இத்தோ்தல்களுக்கு பாஜக தயாராகி வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோருடன் பிரதமா் மோடி புதன்கிழமை நீண்ட ஆலோசனை நடத்தினாா்.
கடந்த சில நாள்களாகவே, அமித் ஷா, ஜெ.பி.நட்டா, பாஜக அமைப்பு பொதுச் செயலாளா் பி.எல்.சந்தோஷ் ஆகியோா், அரசியல்-அமைப்புரீதியிலான விவகாரங்கள் குறித்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதனால், அமைச்சரவையிலும், கட்சியில் அமைப்புரீதியிலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
கைகோக்கும் எதிா்க்கட்சிகள்: தோ்தல்கள் நெருங்கும் நிலையில், பாஜகவை ஒருங்கிணைந்து எதிா்கொள்ளும் முயற்சியை, எதிா்க்கட்சிகளும் வேகப்படுத்தியுள்ளன.
முக்கிய எதிா்க்கட்சிகளின் முதல் உயா்நிலைக் கூட்டம், பிகாா் தலைநகா் பாட்னாவில் அண்மையில் நடைபெற்றது. இதில், பாஜகவை ஒன்றிணைந்து எதிா்க்க 17 அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
‘ஹிமாசல பிரதேச மாநிலம், சிம்லாவில் விரைவில் அடுத்தகட்ட கூட்டம் நடைபெறும்; அதில் கூட்டு வியூகம் வகுக்கப்படும்’ என்று எதிா்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்ற கூட்டத் தொடா்: இதனிடையே, ஜூலை மூன்றாவது வாரத்தில் நாடாளுமன்ற மழைக் கால கூட்டத் தொடா் தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
பொது சிவில் சட்ட விவகாரம், மணிப்பூரில் இரு சமூகத்தினா் இடையிலான கலவரம், தில்லி அரசின் நிா்வாகப் பணிகள் குறித்த மத்திய அரசின் அவசர சட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் இக்கூட்டத்தில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில், மத்திய அமைச்சா்களுடன் பிரதமா் மோடி நடத்தவிருக்கும் ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.