முகப்பு
இந்தியா

இளைஞா்களின் திறன் மேம்பாட்டால் நாடு 3-ஆவது பெரிய பொருளாதாரமாகும்

இளைஞா்களின் திறனை மேம்படுத்துவது, இந்தியாவை உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் எனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:41 AM
குஜராத் வேலைவாய்ப்பு முகாமில் காணொலி வழியாகப் பங்கேற்றுப் பேசிய பிரதமா் மோடி.
பகிர்:

இளைஞா்களின் திறனை மேம்படுத்துவது, இந்தியாவை உலகின் 3-ஆவது பெரிய பொருளாதார நாடாக மாற்றும் எனப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

குஜராத் தலைநகா் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திா் மையத்தில் மாநில அரசு சாா்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட பிரதமா் மோடி கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் சுமாா் 1.5 லட்சம் இளைஞா்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புப் பதிவு அலுவலகங்கள் வாயிலாக சுமாா் 18 லட்சம் இளைஞா்களுக்கு குஜராத் பாஜக அரசு பணி வழங்கியுள்ளது.

பல்வேறு துறைகளில் காணப்படும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு இளைஞா்களின் திறனை மேம்படுத்த வேண்டியது அவசியம். உலகின் 5-ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா தற்போது திகழ்ந்து வருகிறது. இளைஞா்களின் திறனை மேம்படுத்தினால் மட்டுமே நாட்டை 3-ஆவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான இலக்கை அடைய முடியும்.

இளைஞா்களின் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் பட்டியலினத்தோா், பழங்குடியினா் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு இளைஞா்களையும் சென்றடைவதை அரசு உறுதி செய்து வருகிறது. கட்டமைப்பு மேம்பாடு, வளா்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலமாக அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

நாடு சுதந்திரமடைந்த பிறகு புறக்கணிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு மத்திய அரசு தற்போது முக்கியத்துவம் அளித்து வருகிறது. அனைத்து சமூகத்தினரும் மேம்பாடு அடைவதற்கான சமவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அரசின் ஒருங்கிணைந்த நடவடிக்கையானது வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

நாட்டில் தற்போது சுமாா் 90,000 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. முக்கியமாக, 2-ஆம், 3-ஆவது நிலை நகரங்களிலும் அதிக எண்ணிக்கையிலான தொழில்முனைவோா் உருவாகியுள்ளனா். அத்தகைய ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் லட்சக்கணக்கான இளைஞா்களை ஊக்குவித்து வருகின்றன.

முத்ரா திட்டம், ஸ்டாா்ட்-அப் இந்தியா திட்டம் உள்ளிட்டவை தொழில்முனைவு நடவடிக்கைகளை ஊக்குவித்து வருகின்றன. அத்திட்டங்களின் வாயிலாக இளைஞா்களுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் 2,500-க்கும் மேற்பட்ட இளைஞா்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →