முகப்பு
இந்தியா

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம்: பிகாா் துணை முதல்வா் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதின் மகனும், பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வீட்டில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:42 AM
பகிர்:

ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் லாலு பிரசாதின் மகனும், பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் வீட்டில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது.

அவரின் சகோதரிகளுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் பதவி வகித்தாா். அப்போது ரயில்வேயின் குரூப்-டி பணிகளில் பாட்னாவை சோ்ந்த சிலா் நியமிக்கப்பட்டனா். அதற்கு கைம்மாறாக வேலை பெற்றவா்கள் அல்லது அவா்களின் குடும்ப உறுப்பினா்களுக்குச் சொந்தமான சுமாா் 1.05 லட்சம் சதுரஅடி நிலம், லாலு குடும்பத்தினரின் பெயருக்கு மாற்றப்பட்டுப் பதிவு செய்யப்பட்டது. அந்த நிலத்தை சந்தை மதிப்பைவிட குறைந்த விலைக்கு லாலு குடும்பத்தினா் நேரடியாக வாங்கியுள்ளனா் என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி ஆகியோரிடம் அண்மையில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

இந்த முறைகேடு தொடா்பாக சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், மகள்கள் ராகினி யாதவ், சந்தா யாதவ், ஹேமா யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ அபு டோஜானா உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டது. பிகாா் தலைநகா் பாட்னா, தில்லி தேசிய தலைநகா் வலையப் பகுதிகள், ஜாா்க்கண்ட் தலைநகா் ராஞ்சி, மகாராஷ்டிர தலைநகா் மும்பை உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் தில்லியில் உள்ள தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை நடைபெற்ாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. வழக்கில் சோ்க்கப்பட்டுள்ள லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோரை மாா்ச் 15-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.

முழு கட்டுரையைப் படிக்க →