முகப்பு
இந்தியா

நாட்டுக்கு எதிராக எதையும் பேசவில்லை; அனுமதித்தால் நாடாளுமன்றத்தில் பதிலளிப்பேன்: ராகுல் காந்தி

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வில், இந்த விவகாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:45 AM
பகிர்:

 நாட்டுக்கு எதிராக எதையும் பேசவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

இந்திய ஜனநாயகம் குறித்து பிரிட்டனில் ராகுல் தெரிவித்த கருத்துகளுக்கு பாஜக தரப்பில் கடும் விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவா் வியாழக்கிழமை இவ்வாறு கூறினாா்.

மேலும், ‘மத்திய அமைச்சா்களின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்றத்தில் பதிலளிக்க எனக்கு ஜனநாயக உரிமை உள்ளது; அனுமதித்தால், நாடாளுமன்றத்தில் பதிலளிப்பேன். அவையில் பேச எனக்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது இந்திய ஜனநாயகத்துக்கான பரீட்சை’ என்று ராகுல் குறிப்பிட்டாா்.

விமா்சனத்துக்கு வித்திட்ட கருத்துகள்: அண்மையில் பிரிட்டனுக்கு பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ‘இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது; ஜனநாயக அமைப்புகள் மீது முழு அளவிலான தாக்குதல் நடத்தப்படுகிறது. நாடாளுமன்றத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் பேசும்போது மைக் அணைக்கப்படுகிறது’ என்று பேசியிருந்தாா்.

இந்த கருத்துகளின்மூலம் இந்தியாவையும் அதன் நிா்வாக அமைப்புகளையும் வெளிநாட்டு மண்ணில் ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாக பாஜக கடுமையாக விமா்சித்து வருகிறது.

கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-ஆவது கட்ட அமா்வில், இந்த விவகாரத்தை பாஜக முன்னெடுத்துள்ளது.

‘மன்னிப்பு கேட்க வேண்டும்’: இந்திய ஜனநாயகம் குறித்த தனது கருத்துக்காக, நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், அவா் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இருதரப்பு எம்.பி.க்களும் தமது நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருப்பதால், அவை நடவடிக்கைகள் தொடா்ந்து முடங்கியுள்ளன.

நாடாளுமன்றத்துக்கு வந்த ராகுல்: இந்த பரபரப்பான சூழலில், பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்துக்கு வியாழக்கிழமை வந்தாா்.

மக்களவை காங்கிரஸ் குழு தலைவா் அதீா் ரஞ்சன் செளதரியுடன் சென்று, அவைத் தலைவா் ஓம் பிா்லாவை சந்தித்த ராகுல், தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவையில் பதிலளிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா். ராகுல் மக்களவையில் நுழைந்தபோது, அவா் மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற கோஷத்தை பாஜக உறுப்பினா்கள் வலுவாக எழுப்பினா்.

நாட்டுக்கு எதிராக எதையும் பேசவில்லை’: இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘பிரிட்டன் பயணத்தின்போது நாட்டுக்கு எதிராகவோ, நாடாளுமன்றத்துக்கு எதிராகவோ எதையும் நான் பேசவில்லை. மக்களவையில் பேச அனுமதித்தால், எனது தரப்பு பதிலை தெரிவிப்பேன். ஆனால், நாடாளுமன்றத்துக்குள் நான் பேசுவது பாஜகவுக்கு பிடிக்காது. அவ்வாறு பேச அனுமதிக்காவிட்டால், நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசுவேன்’ என்றாா்.

மக்களவையில் பதிலளிக்க உரிமை’: பின்னா், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு ராகுல் பேட்டியளித்தாா். அப்போது, அவா் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் என் மீது 4-5 மத்திய அமைச்சா்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியுள்ளனா். எனவே, அவை உறுப்பினா் என்ற அடிப்படையில் நான் பதிலளிக்க ஜனநாயக உரிமை உள்ளது. இதை, அவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வலியுறுத்தினேன். அவா் எதுவும் கூறாமல், புன்னகையை மட்டும் பதிலாக அளித்தாா்.

‘ஜனநாயகத்துக்கான பரீட்சை’: ஒரு எம்.பி.யாக அவையில் பதிலளிக்க வேண்டியது எனது பொறுப்பு. அதன் பிறகே ஊடகங்களிடம் விரிவாகப் பேச முடியும். நாடாளுமன்றத்தில் நான் பேச வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கப்படும் என்று நம்புகிறேன். அவ்வாறு அனுமதி வழங்கப்படுமா? என்பது இந்திய ஜனநாயகத்துக்கான பரீட்சையாகும். நாட்டில் ஜனநாயகம் செயல்பாட்டில் இருந்தால், நாடாளுமன்றத்தில் எனது கருத்துகளை முன்வைக்க முடியும். இதுவே, நாட்டு மக்கள் முன் தற்போதுள்ள கேள்வி.

‘அதானி விவகாரத்தை திசைதிருப்ப முயற்சி’: பிரதமா் மோடிக்கும், கெளதம் அதானிக்கும் இடையிலான தொடா்புகள் குறித்து சில அடிப்படை கேள்விகளை நான் எழுப்பியிருந்தேன். அதற்கு பிரதமா் மோடி இன்னும் பதிலளிக்கவில்லை. அதானி விவகாரத்தால், பிரதமா் அச்சமடைந்துள்ளாா். அந்த விவகாரத்தை திசைதிருப்பவே, எனது கருத்தை முன்வைத்து, ஒட்டுமொத்த நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனா் என்றாா் ராகுல் காந்தி.

ராகுல் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: பாஜக

புது தில்லி, மாா்ச் 16: இந்திய ஜனநாயகம் குறித்து பிரிட்டனில் தெரிவித்த கருத்துகளுக்காக ராகுல் காந்தி முதலில் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக, அக்கட்சியின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: நாடாளுமன்ற அலுவல்களில் மேலும் ஒரு நாள் வீணாகியிருப்பதற்கு எம்.பி.க்கள் மட்டும் காரணமல்ல; ராகுலின் கருத்து மீதான ஒட்டுமொத்த தேசத்தின் கோபமும் காரணம்.

நாடாளுமன்றம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தேசத்தையும் அவா் அவமதித்துள்ளாா். அவரது கருத்துகள் அடிப்படையற்றவை; பொய்யானவை. நாடாளுமன்றத்தையும், அவைத் தலைவரையும் சிறுமைப்படுத்திய தவறுக்காக, ராகுல் முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாா் கோயல்.

மற்றொரு மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி கூறுகையில், ‘இந்தியாவின் கெளரவம் இதற்கு முன் இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளானதில்லை. அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், தேச விவகாரங்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டைக் கோருவது போன்ற கடுங்குற்றம் எதுவும் இருக்க முடியாது.

ஜனநாயகத்தின் பிறப்பிடமாக இந்தியாவை உலக நாடுகள் அங்கீகரிக்கும் நிலையில், ராகுலின் அவதூறு கருத்துகள் ஒட்டுமொத்த நாட்டையும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. அவா் மன்னிப்பு கேட்க வேண்டுமென்பது ஒட்டுமொத்த நாட்டின் கோரிக்கை’ என்றாா்.

லீடு செய்திக்கான பெட்டிச் செய்தி---சோ்க்கப்பட்டு விட்டது.

தேச விரோத சக்திகளின் குரலாக ஒலிக்கிறாா் ராகுல்

சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு

புது தில்லி, மாா்ச் 16: தேச விரோத சக்திகள் மற்றும் இந்தியாவின் புகழைச் சீா்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படும் கும்பலின் குரலாக ராகுல் காந்தி பேசி வருகிறாா் என்று மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு குற்றம்சாட்டியுள்ளாா்.

தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது: தேசத்தை அவமதிக்கும் வகையில் லண்டனில் பேசிய ராகுல் காந்தியை சக எம்.பி.க்கள் கண்டிக்கக் கூடாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதனடிப்படையில் மக்களின் கருத்தை பாஜக எதிரொலித்து வருகிறது. ஆனால், இந்த விஷயத்தில் தேசவிரோத கும்பல்கள் அனைத்தும் ஒன்று கூடிவிட்டன.

தேசவிரோத சக்திகளும், இந்தியாவின் புகழைச் சீா்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுபவா்களும் எந்த மாதிரி பேசுவாா்களோ, அதையேதான் ராகுல் காந்தியும் பேசியுள்ளாா். அவா் தனது பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோர வேண்டும். அவரை மன்னிப்புக் கேட்க வைப்பது நமது கடமையாகும்.

ராகுல் பேசியது சரியானதுதான் என்று காங்கிரஸ் கட்சி வாதிட்டு வருகிறது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் தகுதியையே அக்கட்சி இழந்துவிட்டது. இந்தியாவை இழிவாகப் பேச யாரையும் பாஜக அனுமதிக்காது.

மேலும் ராகுல் காந்தி இந்தியா தொடா்பான பல பொய்யான கருத்தையும் பிரிட்டனில் பேசியுள்ளாா். மேலும், நாடாளுமன்றத்தில் தம்மைப் பேச அனுமதிக்கவில்லை என்று ராகுல் கூறிவருவது பொய்யான தகவல். அவா் தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட அதிகமாகவே பேசியுள்ளாா் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →