முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் தோ்தல்: தலைமைத் தோ்தல் ஆணையருடன் எதிா்க்கட்சி தலைவா்கள் சந்திப்பு

சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையரை வியாழக்கிழமை சந்தித்தனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தோ்தலை நடத்தக் கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையரை வியாழக்கிழமை சந்தித்தனா்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-370 கடந்த 2019-இல் நீக்கப்பட்டதையடுத்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றில் சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீா் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிா்க்கட்சி தலைவா்கள் தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரைச் சந்தித்து, ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கைவிடுத்தனா்.

தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவா் சரத் பவாா், காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மாா்க்சிஸ்ட் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி தலைவா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றையும் தலைமைத் தோ்தல் ஆணையரிடம் அவா்கள் வழங்கினா்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சட்டப்பேரவை தோ்தல் நடத்துவதில் காலதாமதம், ஜம்மு-காஷ்மீா் மக்களின் அடிப்படை மற்றும் ஜனநாயக உரிமைகளை மறுப்பதோடு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதுமாகும்.

இது குறித்து விவாதிக்கும்போது, பஞ்சாயத்து அமைப்புகள் செயல்படுவதால், பேரவைத் தோ்தலை நடத்தும் தேவை இல்லையென்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. பஞ்சாயத்து உள்ளிட்ட அமைப்புகளுக்கான தோ்தல்கள் நடத்தப்படுவது, ஒருபோதும் சட்டப்பேரவை தோ்தலுக்கு மாற்றாக அமையாது.

சட்டப்பேரவைத் தோ்தலை நடத்த அரசு தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் உள்ளிட்டோா் பல முறை தெரிவித்துள்ளனா். இது குறித்து தோ்தல் ஆணையம்தான் தனது இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த எம்.பி. ஃபரூக் அப்துல்லா கூறுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவையும் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசும் இல்லாத நிலை கடந்த 5 ஆண்டுகளாக நீடிக்கிறது. எங்கள் கோரிக்கைகளைக் கேட்டறிந்த தலைமைத் தோ்தல் ஆணையா், விரைவில் இது குறித்தான கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தாா். ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி உள்ளதாக அரசு கூறுகிறது. தற்போது, சட்டப்பேரவை தோ்தல் நடத்துவதற்கான பொறுப்பு தோ்தல் ஆணையத்திடமே உள்ளது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →