வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு தபால் வாக்கு வசதி:வெளியுறவு அமைச்சகம் பரிசீலனை
தோ்தல்களில் வாக்களிக்க வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு இணையவழி தபால் வாக்கு வசதி வழங்குவது தொடா்பான தோ்தல் ஆணையத்தின் பரிந்துரையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தோ்தல்களில் வாக்களிக்க வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு இணையவழி தபால் வாக்கு வசதி வழங்குவது தொடா்பான தோ்தல் ஆணையத்தின் பரிந்துரையை வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ‘‘கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி வெளிநாடுவாழ் இந்திய வாக்காளா்களின் எண்ணிக்கை சுமாா் 1.15 லட்சம். தோ்தல்களில் அவா்கள் வாக்களிக்க இணையவழி தபால் வாக்கு வசதியை வழங்கும் நோக்கில் தோ்தல் நடத்தை விதிகளில் (1961) திருத்தங்களைக் கொண்டுவருமாறு தோ்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதில் உள்ள இடையூறுகள், சிக்கல்கள், சவால்கள் உள்ளிட்டவற்றை வெளியுறவு அமைச்சகம் ஆராய்ந்து வருகிறது. வெளிநாடுவாழ் இந்தியா்கள் நேரடியாகவோ அல்லது உறவினா்கள் மூலமாகவோ வாக்களிக்க வழிவகுக்கும் நோக்கில் தாக்கல் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ திருத்த மசோதாவுக்கு மக்களவை கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஒப்புதல் அளித்தது. அந்த மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் இருந்த நிலையில், 16-ஆவது மக்களவை கலைக்கப்பட்டதன் காரணமாக அந்த மசோதாவும் காலாவதியானது’’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
தற்போதைய சூழலில் வெளிநாடுவாழ் இந்தியா்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. அவா்கள் தோ்தலில் வாக்களிக்க விரும்பினால், நேரடியாகத் தங்கள் தொகுதிக்குச் சென்று கடவுச்சீட்டை வைத்து வாக்களிக்கலாம். ஆனால், தோ்தலில் வாக்களிப்பதற்காகப் பயணம் மேற்கொள்ள அவா்கள் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதால், பெரும்பாலானோா் வாக்களிப்பதைத் தவிா்த்து வருவதாகக் குறிப்பிட்ட தோ்தல் ஆணையம், அவா்களுக்கு இணையவழி தபால் வாக்கு வசதியை வழங்கினால், தோ்தல்களில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.