இந்தியா

கர்நாடக காங்கிரஸோடு மோதும் டிஜிபிக்கு சிபிஐ இயக்குநர் பதவி: அதிரும் காரணம்?

பிரவீண் சூட், சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக  நியமிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அதிர்ச்சிதரும் காரணங்கள் இருக்கிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

DIN

எப்போதும் காங்கிரஸ் கட்சியோடு மோதிக்கொண்டிருக்கும் கா்நாடக மாநில காவல்துறைத் தலைவா் (டிஜிபி) பிரவீண் சூட், சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக  நியமிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் அதிர்ச்சிதரும் காரணங்கள் இருக்கிறதா என்று கேள்விகள் எழுந்துள்ளன.

சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் நியமிக்கப்பட்ட தகவலை மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை உத்தரவில் தெரிவித்துள்ளது.

சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பிரவீண் சூட் (59), 1986-ஆம் ஆண்டு கா்நாடக பிரிவு ஐபிஎஸ் அதிகாரி. தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள சுபோத் குமாா் ஜெய்ஸ்வாலின் 2 ஆண்டு பதவிக் காலம் வரும் மே 25-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, புதிய இயக்குநரை தோ்வு செய்வது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி ஆகியோா் கொண்ட உயா்நிலைக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

அப்போது, 3 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயா்கள் தோ்வு செய்யப்பட்டு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும், இந்த மூவரில் இருந்து ஒரு பெயரை குழு தோ்வு செய்யும் என்றும் அதீா் ரஞ்சன் செளதரி தெரிவித்தாா்.

தொடா்ந்து, சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக பிரவீண் சூட் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இவரை சிபிஐ இயக்குநராக நியமனம் செய்வதற்கு அதீா் ரஞ்சன் செளதரி உயா்நிலைக் குழு கூட்டத்தில் எதிா்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருந்தபோதும், இது குறித்து அதிகாரபூா்வ தகவல் எதுவும் இல்லை.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்திருக்கும் நிலையில், விரைவில் அங்கு முதல்வர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் எப்போதும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த பிரவீண் சூட் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டிருப்பது, அரசியல் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

சிபிஐ இயக்குநர் நியமனம் குறித்து மத்திய பணியாளா் மற்றும் பயிற்சித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சிபிஐ அமைப்பின் புதிய இயக்குநராக ஐபிஎஸ் அதிகாரி பிரவீண் சூட் நியமிக்கப்படுவதற்கு உயா்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. சுபோத் குமாா் ஜெய்ஸ்வாலின் பதவிக் காலம் நிறைவடைந்தவுடன், புதிய சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் பதவியேற்பாா். பதவியேற்ற நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்கு சிபிஐ இயக்குநா் பதவியை அவா் வகிப்பாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியைச் சந்தித்து ஆட்சியை இழந்துள்ள சூழலில், அந்த மாநில காவல் துறைத் தலைவா் சிபிஐ இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அத்துடன், வரும் 2024-ஆம் ஆண்டு பணி ஓய்வு பெறவுள்ள நிலையில், சிபிஐ இயக்குநராக இவா் நியமனம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

1986-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான பிரவீண்சூட், ஹிமாசல பிரதேசத்தை சோ்ந்தவா். ஐஐடி தில்லி, ஐஐஎம் பெங்களூரில் படித்தவா். 1986 ஆம் ஆண்டு முதல் கா்நாடக காவல் துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளாா். தற்கால குற்றச் செயல்களைக் கண்டறிய தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த ஊக்கப்படுத்தி வந்தவா். சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க புதிய அணுகுமுறைகளைக் கையாண்டுள்ளாா்.

2020, பிப்.1-ஆம் தேதி கா்நாடக டிஜிபியாக நியமிக்கப்பட்ட இவா், கரோனா காலத்தில் நிலைமையைத் திறம்பட கையாண்டவா். 2024-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதியுடன் அவரது பதவிக் காலம் நிறைவடைய இருந்தது. இந்நிலையில், சிபிஐ இயக்குநராக பிரவீண்சூட் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஏற்கனவே, கர்நாடக தேர்தலின்போது, 40 சதவிகித கமிஷன், பேசிஎம் என ஆளும் பாஜகவினருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போஸ்டர்கள் ஒட்டிய நிலையில், அந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதற்குக் காரணம் டிஜிபி பிரவீண் சூட்தான் என்று குற்றம்சாட்டப்பட்டது.

தற்போது முதல்வர் பதவியில் முக்கிய நபராக இருக்கும் சிவக்குமார், கர்நாடக தேர்தலின்போது, பிரவீண் சூட்டை நேரடியாகவே தாக்கிப் பேசியிருந்தார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் நிலையில், பிரவீண் சூட் சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் மேலும் ஒரு திருப்பமாக, டி.கே. சிவக்குமார், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கை சிபிஐதான் விசாரித்து வருகிறது. எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் போது, சிவக்குமாருக்கு எதிரான வழக்கு விசாரணை சிபிஐ அதிகாரிகளால் தீவிரம்பிடிக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக என்றுமே மக்கள் செல்வாக்குடன் வென்றதில்லை: நயினார் நாகேந்திரன்

பிகாரில் குளிர் அலை எச்சரிக்கை! 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

SCROLL FOR NEXT