கர்நாடக முதல்வர் யார்? காங்கிரஸ் மத்திய பார்வையாளர்கள் தில்லி வருகை
3 பேர் கொண்ட மத்திய பார்வையாளர்கள் இன்று தில்லி திரும்பி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தங்களது அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்கள்.
புது தில்லி: தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில், கர்நாடக மாநில முதல்வரைத் தேர்வு செய்ய அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட மத்திய பார்வையாளர்கள் இன்று தில்லி திரும்பி, கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் தங்களது அறிக்கையை தாக்கல் செய்யவிருக்கிறார்கள்.
கர்நாடகம் வந்த மத்திய பார்வையாளர்கள், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களிடம், காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து பேசி கேட்டறிந்தனர். இதன் அடிப்படையில், அவர்கள் தங்களது இறுதி அறிக்கையை மல்லிகார்ஜுன கார்கேவிடம் இன்று தாக்கல் செய்யவிருக்கிறார்கள்.
கர்நாடத்தில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு விடைகாணும் வகையில், மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷீல் குமார் ஷிண்டே, கட்சித்தலைவர்கள் பன்வார் ஜிதேந்திரா மற்றும் தீபக் பாபரியா ஆகியோர் கொண்ட பார்வையாளர் குழுவை ஞாயிற்றுக்கிழமை நியமித்தார்.
புதிய எம்எல்ஏக்களின் கருத்துகளை கேட்டறிந்து அறிக்கை தயாரித்துள்ளோம். அதனை காங்கிரஸ் தலைவரிடம் ஒப்படைக்கவிருக்கிறோம் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்றக் கூட்டத்தில், அடுத்த காங்கிரஸ் சட்டப்பேரவைத்தலைவரை தேர்வு செய்வது குறித்து ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.