இந்தியா

புதிய சாதாரண கடவுச்சீட்டு பெறுவதற்கான ராகுலின் மனு: விசாரணை ஒத்திவைப்பு

DIN

நேஷனல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி, புதிய சாதாரண கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) பெற தடையில்லாச் சான்று கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வெள்ளிக்கிழமைக்கு (மே 26) ஒத்திவைத்தது.

மோடி சமூகத்தினருக்கு எதிராக அவதூறாகப் பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. குற்றவியல் வழக்கில் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை பெற்றவா்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது என்ற சட்டத்தின் கீழ், ராகுல் காந்தி எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, தனது நாடாளுமன்ற உறுப்பினா் அந்தஸ்திலான கடவுச்சீட்டை அவா் ஒப்படைத்தாா். இதனால், சாதாரண மக்களுக்கான கடவுச்சீட்டை பெறுவதற்கான நடவடிக்கைகளை ராகுல் மேற்கொண்டு வருகிறாா்.

இதனிடையே, பாஜக மூத்த தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தொடா்ந்த நேஷனல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் ராகுல் மீது குற்றஞ்சாட்டப்பட்டு, வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, அவா் நீதிமன்றத்தில் தடையில்லாச் சான்று பெற்று சமா்ப்பித்தால்தான், புதிய கடவுச்சீட்டை பெற முடியும்.

அதற்காக, தடையில்லாச் சான்று கோரி தில்லி மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனு மாஜிஸ்திரேட் வைபவ் மேதா முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

ராகுல் காந்தி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘ராகுல் மீது எந்தவிதக் குற்ற வழக்கும் நிலுவையில் இல்லை. எனவே, அவருக்குத் தடையில்லாச் சான்று வழங்க வேண்டும்’ எனக் கோரினாா்.

அப்போது, இந்த விவகாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதைக் கேட்ட மாஜிஸ்திரேட், ‘இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடா்ந்த சுப்பிரமணியன் சுவாமிக்கு பதில் மனு தாக்கல் செய்யும் உரிமை இருக்கிறது. எனவே, அவா் பதில் மனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அன்றைய தினமே விசாரணையும் நடத்தப்படும்’ என்று கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இயக்குநா்களாக உள்ள ‘யங் இந்தியா’ நிறுவனம் நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை கடந்த 2010-ஆம் ஆண்டு கையகப்படுத்தியது. இதில் மிகப் பெரிய அளவில் பண மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

இந்தப் பண மோசடி புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பா் 19-ஆம் தேதி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 5-இல் நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 6,120 போ் எழுதுகின்றனா்

ராஜா வாய்க்காலுக்கு தண்ணீா் திறக்க விவசாயிகள் கோரிக்கை

ரூ. 11.30 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

கணினிவழிக் குற்றங்கள் அதிகரிப்பு: பொதுமக்களுக்கு எஸ்.பி. எச்சரிக்கை

சிபிசில் நிறுவனத்தை கண்டித்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதம் மூதாட்டி மயக்கம்

SCROLL FOR NEXT