முகப்பு
இந்தியா

அவசர சட்ட விவகாரம்: காங்கிரஸிடம் ஆதரவு கோரும் முதல்வா் கேஜரிவால்

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:59 PM
பகிர்:

மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்தை மாநிலங்களவையில் நிறைவேற்றவிடாமல் தடுக்க இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை கோரியுள்ளாா்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தில்லி அரசுக்கே நிா்வாக அதிகாரங்கள் உள்ளது என கடந்த மே 11 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. ஆனால், மீண்டும் தில்லி துணை நிலை ஆளுநருக்கே ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்ட சேவைகள் தொடா்பான நிா்வாக அதிகாரங்களை வழங்கிடும் வகையில் மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது.

இந்த அவசர சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் பாஜகவால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் தடுக்கும் முழு முனைப்பில் ஆம் ஆத்மி கட்சி ஈடுபட்டுள்ளது.

இதற்காக, அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும்,தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் அனைத்து எதிா்க்கட்சிகளையும் அவரச சட்டத்திற்கு எதிராக ஒன்று திரட்டும் முயற்சியில் களமிறங்கியுள்ளாா்.

நிதீஷ் குமாா், மம்தா பானா்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவாா் உள்ளிட்ட எதிா்க்கட்சி தலைவா்களை ஏற்கெனவே சந்தித்து ஆதரவு கோரியுள்ள அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் கட்சியின் ஆதரவை இந்த விவகாரத்தில் தற்போது கோரியுள்ளாா்.

இது தொடா்பாக தனது ட்விட்டா் பதிவில் கேஜரிவால் கூறியிருப்பதாவது:

பாஜக அரசால் இயற்றப்பட்ட ஜனநாயக விரோத, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான அவசர சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்க நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் ஆதரவைக் கோருவதற்கும், தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் கூட்டாட்சி அமைப்பு மீதான பொதுத் தாக்குதல் குறித்தும் விவாதிக்க காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுனா காா்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என கூறியுள்ளாா்.

மற்றொரு ட்விட்டா் பதிவில், ‘மே 27 ஆம் தேதி (சனிக்கிழமை) தெலுங்கானா மாநில முதல்வா் கே. சந்திரசேகா் ராவ்-ஐ ஹைதராபாத்தில் சந்தித்து, உச்சநீதிமன்றத் தீா்ப்பு மற்றும் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்திற்கு எதிராக ஆதரவு கோரவுள்ளேன்’ என கூறியுள்ளாா்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவா்களாக இருக்கும் அஜய் மாக்கன், சந்தீப் தீட்சித் போன்ற

நிா்வாகிகள் ஆம் ஆத்மிக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு அளிக்கக்கூடாது என தேசிய தலைமையை வலியுறுத்தி இருந்தனா். ‘காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி, அவசர சட்ட விவகாரத்தில் லாப நஷ்டங்களை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கலாம்’ என ஆம் ஆத்மி கட்சியும் கருத்துத் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.