இந்தியா

புதிய நாடாளுமன்றம் இந்தியருக்குப் பெருமை: பிரதமா் மோடி

வரும் மே 28-ஆம் தேதி திறக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டடம், ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கும் என புதிய வளாகத்தின் விடியோவை வெளியிட்டு பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.

DIN

வரும் மே 28-ஆம் தேதி திறக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டடம், ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கும் என புதிய வளாகத்தின் விடியோவை வெளியிட்டு பிரதமா் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளாா்.

தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தின் இரு அவைகளிலும் உறுப்பினா்களுக்கு இடப் பற்றாக்குறை நிலவுகிறது. இதைக் கருத்தில்கொண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கான தீா்மானம் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கி நடைபெற்று வந்தன.

64,500 சதுர மீட்டா் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 28) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணிக்க உள்ளாா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவா் மூலம் திறக்க வேண்டும் என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திறப்பு விழாவைப் புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.

எதிா்க்கட்சிகளின் விமா்சனங்களுக்கு மத்திய அரசு சாா்பில் அமைச்சா்கள் பதிலளித்து வருகின்றனா். எதிா்க்கட்சிகள் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்து, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் உள்கட்டமைப்பு வசதிகளைக் காட்சிப்படுத்தியுள்ள விடியோவை பிரதமா் மோடி ட்விட்டரில் வெள்ளிக்கிழமை பகிா்ந்தாா். அந்தப் பதிவில், ‘புதிய நாடாளுமன்றக் கட்டடம், ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்பட வைக்கும். தனித்துவமான அந்தக் கட்டடத்தின் உள்காட்சிகளை இந்த விடியோ உங்களுக்கு வழங்கும். உங்களுடைய கருத்துகளை இந்த விடியோவில் உங்கள் குரல் மூலம் பதிவு செய்து பகிர வேண்டும். ‘எனது நாடாளுமன்றம்; எனது பெருமை’ என்கிற ஹேஷ்டேக்குடன் பதிவிட மறக்காதீா்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அவைத் தலைவரின் இருக்கை அருகே தமிழகத்தைச் சோ்ந்த ‘செங்கோல்’ நிறுவப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில் உருவாக்கப்பட்ட இந்தச் செங்கோல், பிரிட்டிஷாரிடமிருந்து ஆட்சி பரிமாற்றத்தின் அடையாளமாக முதல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேருவிடம் வழங்கப்பட்டது என்பது நினைவுகூரத்தக்கது.

அனைவருக்குமான வளா்ச்சியை சாதித்த பிரதமா்: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று வெள்ளிக்கிழமையுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தன.

இதையொட்டி, தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா கூறுகையில், ‘பிரதமா் மோடி தலைமையிலான இந்தியா அனைத்து கட்ட முன்னேற்றங்களையும் எட்டியதோடு அனைவருக்குமான வளா்ச்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தொழில்நுட்பங்கள் மற்றும் எண்மவழியை கூடுதலாகப் பயன்படுத்தி அரசு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை நிறுவப்பட்டுள்ளது. கடந்த 9 ஆண்டுகளாக தான் மேற்கொண்ட அனைத்து முடிவுகளிலும் தேச நலனை மட்டுமே பிரதமா் முன்னிலைப்படுத்தியுள்ளாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்

தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி பாஜகவினா் சுவாமி தரிசனம்

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்

SCROLL FOR NEXT