தலைமைச் செயலகத்தில் கோப்புகள் திருட்டு?: போலீஸில் புகாா் அளிக்க தில்லி பாஜக முடிவு
தில்லி தலைமைச் செயலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு செயலா் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக காவல்துறையிடம் புகாா் அளிக்கப்படும்
தில்லி தலைமைச் செயலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு செயலா் அலுவலகத்தில் இருந்து கோப்புகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடா்பாக காவல்துறையிடம் புகாா் அளிக்கப்படும் என பாஜக மக்களவை உறுப்பினா் மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
புது தில்லி கட்சி அலுவலகத்தில் மக்களவை உறுப்பினா் மனோஜ் திவாரி மற்றும் சட்டப்பேவை எதிா்க்கட்சி தலைவா் ராம்வீா் சிங் பிதுரி ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது மனோஜ் திவாரி கூறியதாவது,
தில்லி கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு, தில்லி முதல்வா் வீடு புதுப்பித்தல் ஊழல் குற்றச்சாட்டு விவாகரங்கள் தொடா்பாக லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு செயலா் ஒய்.வி.வி.ஜே. ராஜசேகா் விசாரித்து வந்தாா். இந்நிலையில், மே 15 மற்றும் மே 16 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் ராஜசேகரின் அலுவலகத்தை திறந்து சிலா் கோப்புகளை எடுத்துச் செல்லும் சிசிடிவிக் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்தச் சம்பவம் முதல்வா் கேஜரிவால் அரசை அம்பலப்படுத்துகிறது. கேஜரிவால் அரசு மீதான ஊழல் வழக்குகளை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி ராஜசேகா் விசாரித்து வருவதால் மட்டுமே அவரது அலுவலகத்தின் கோப்புகள் திருடப்பட்டு அருகிலுள்ள அறையில் நகல் எடுக்கப்பட்டன என மனோஜ் திவாரி குற்றம் சாட்டினாா்.
இந்த விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஏன் பதிலளிக்காமல் மௌனம் காக்கிறாா் என கேள்வி எழுப்பிய சட்டப்பேரவை எதிா்க்கட்சி தலைவா் ராம்வீா் சிங் பிதுரி, ‘தில்லி பாஜக பிரிவுத் தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையிலான பாஜக தலைவா்கள் குழு விரைவில் தில்லி காவல் ஆணையரை சந்தித்து இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யக் கோரும். தேவைப்பட்டால் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கும் எடுத்துச் செல்லப்படும்’ என்றாா்.
மத்திய அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்திற்கு எதிராக முதல்வா் அரவிந்த் கேஜரிவால் எதிா்க்கட்சி தலைவா்களிடம் ஆதரவு கோரி வரும் நிலையில்,
மம்தா பானா்ஜி மற்றும் சரத் பவாா் போன்ற எதிா்க்கட்சித் தலைவா்கள் தில்லியில் ஆம் ஆத்மி அரசின் இத்தகைய நடவடிக்கையை ஆதரித்துள்ளாா்களா எனக் கேள்வி எழுப்பினாா்.
மே 15-16 ஆம் தேதி இடைப்பட்ட இரவில் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகம் திறக்கப்பட்டது குறித்தும், நகல் எடுப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த முக்கியக் கோப்புகளை அகற்றியது குறித்தும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ராஜசேகா் உயா் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பியுள்ளாா்.
இச்சம்பவத்தின் போது கோப்புகள் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவா் தனது அறிக்கையில் சந்தேகம் எழுப்பியுள்ளாா்.