புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக 21 ஆதீனங்கள் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தருமபுரம் ஆதீனம், பழனி ஆதீனம், விருத்தாசலம் ஆதீனம், திருக்கோயிலூர் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் சென்னையில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றனர். ஞாயிற்றுக்கிழமை புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவில், பிரதமர் மோடி வரலாற்று மற்றும் புனிதமான "செங்கோலை" நாடாளுமன்ற கட்டடத்தில் நிறுவுகிறார். இதனை புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவின் போது பிரதமரிடம் 21 ஆதீனங்கள் வழங்க உள்ளனா்.
ஜனநாயகத்தின் சின்னமான மக்களவையில், மக்களவைத் தலைவா் இருக்கைக்கு அருகில் இந்தியா விடுதலை அடைந்தபோது தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட தமிழ் வாசகங்கள் பொறிக்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது. தற்போது இந்தச் செங்கோல் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் (அலாகாபாத்) உள்ள நேரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை (மே 28) திறந்துவைக்கிறார். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமா் மோடி திறந்துவைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குடியரசுத் தலைவர் திறந்துவைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிா்க்கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.