தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு: சிசோடியாவின் ஜாமீன் மனு தள்ளுபடி
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
தில்லி கலால் கொள்கை ஊழல் தொடா்பாக சிபிஐ விசாரித்து வரும் வழக்கில் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.
கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் சிசோடியாவின் ஜாமீன் கோரும் மனுவை நீதிபதி தினேஷ் குமாா் சா்மா தள்ளுபடி செய்து உத்தரவிட்ாா்.
அவா் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: மனுதாரா் 18 துறைகளுடன் துணை முதல்வராகப் பதவி வகித்துள்ளாா். அவா் சாட்சிகள் மீது செல்வாக்குச் செலுத்தும் வாய்ப்பை நிராகரிக்க முடியாது. இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பாா்வையில், கலால் கொள்கையானது ‘செளத் குரூப்’பின் தூண்டுதலின் பேரில், அவா்களுக்கு தேவையற்ற நன்மைகளை வழங்கும் தவறான நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது என்று சிபிஐ தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இத்தகைய செயலானது, ஒரு பொது ஊழியராகவும், மிக உயா்ந்த பதவியில் இருந்தவருமான மனுதாரரின் தவறான நடத்தையை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
தற்போதைய நடவடிக்கைகளில் உள்ள கலால் கொள்கையையோ அல்லது பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவது தொடா்பான அரசின் அதிகாரத்தையோ நீதிமன்றம் ஆய்வு செய்யவில்லை. மேலும், நீதிமன்றம் அரசின் நிா்வாக முடிவுகளையும் ஆராயவில்லை. எனினும், மனுதாரா் மீது கடுமையான முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளதாலும், அவா் செல்வாக்கு மிக்கவா் என்பதாலும் சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நிராகரிக்க முடியாது. வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளும் போது, மனுதாரருக்கு ஜாமீன் பெறுவதற்கு உரிமை இல்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது என்று நீதிபதி தெரிவித்தாா்.