லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள்!
சிட்பண்ட் வழக்கில் ஒருவரை கைது செய்யாமல் இருப்பதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய இரு அமலாக்கத்துறை அதிகாரிகளை ராஜஸ்தான் மாநில லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் கிஷோர் மீனா மற்றும் பாபுலால் மீனா ஆகியோர் சிட்-பண்ட் வழக்கில் ஒருவரை கைது செய்யாமல் இருப்பதற்காக ரூ.17 லட்சத்தினை லஞ்சமாகக் கேட்டுள்ளனர். அவர் ரூ.15 லட்சத்தினை அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கொடுத்தபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களைக் கையும், களவுமாக கைது செய்தனர்.
இதையும் படிக்க: பழங்குடியினரிடம் இருந்து நிலங்களை பறிக்க முயலும் பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ்: கார்கே குற்றச்சாட்டு!
Advertisement
லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் இயக்குநர் ஹேமந்த் பிரியதர்ஷி கூறியதாவது, “புகார்தாரரின் மீது சிட்-பண்ட் வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும், அவரைக் கைது செய்யாமல் இருப்பதற்கு ரூ.17 லட்சத்தினை லஞ்சமாக கொடுக்க வேண்டும் எனவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக எங்களுக்கு புகார் வந்தது. அதுகுறித்து மேலும் விசாரித்தபோது புகார் உண்மையென தெரியவந்தது.
அதையடுத்து ரூ.15 லட்சத்தினை கொடுக்குமாறு கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவரும் லஞ்சப் பணத்தினை பெறும்போது கையும், களவுமாக கைது செய்தோம். அவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.” என்று தெரிவித்தார்.