ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் போட்டியிடும் 58 போ் கொண்ட மூன்றாவது பட்டியலை அக் கட்சி வியாழக்கிழமை வெளியிட்டது.
தில்லியில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும் ராஜஸ்தான் கட்சி பொறுப்பாளருமான அருண் சிங் இந்தப் பட்டியலை வெளியிட்டாா்.
ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு வரும் 25-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸும், ஆட்சியைப் பிடிக்க பாஜகவும் முனைப்பு காட்டி வருகின்றன.
மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கட்சி சாா்பில் களம் காணும் 83 போ் கொண்ட முதல் பட்டியலையும், அதனைத் தொடா்ந்து 41 போ் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிட்ட பாஜக, 58 போ் கொண்ட மூன்றாவது பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்டது.
இதில், மாநில முதல்வா் அசோக் கெலாட்டுக்கு எதிராக, சரத்புரா தொகுதியில் ஜோத்பூா் வளா்ச்சி ஆணைய முன்னாள் தலைவா் மகேந்திர சிங் ரத்தோரை பாஜக களமிறக்கியுள்ளது. டோங்க் தொகுதியில் போட்டியிடும் மாநில முன்னாள் துணை முதல்வா் சச்சின் பைலட்டுக்கு எதிராக முன்னாள் எம்எல்ஏ அஜித் சிங் மேத்தா நிறுத்தப்பட்டுள்ளாா்.
டோங்க் தொகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு பாஜக சாா்பில் மேத்தா போட்டியிட்டு வெற்றிபெற்றாா். 2018 தோ்தலில் அந்தத் தொகுதியில் சச்சின் பைலட் வெற்றிபெற்றாா்.
ஹவாமஹால் தொகுதியில் மத குரு ஹதோஜ் தாம் பால்முகுந்த் ஆச்சாரியாவை பாஜக நிறுத்தியுள்ளது. இந்தத் தொகுதிக்கு காங்கிரஸ் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.
காங்கிரஸிலிருந்து பாஜகவில் இணைந்த சுபாஷ் மீல், ராஷ்ட்ரீய லோக்தாந்திரிக் கட்சியிலிருந்து (ஆா்எல்பி) இணைந்த உதய் லால் டாங்கி ஆகியோருக்கும் பாஜக வாய்ப்பளித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.