FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது பற்றி...

Updated On : 27 பிப்ரவரி 2026, 9:48 am IST
திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்
பகிர்:

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் திமுகவில் வெள்ளிக்கிழமை இணைந்தனா்.

சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீா்செல்வம், அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோா் தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனா்.

இந்த நிகழ்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

ஓபிஎஸ் கடந்து வந்த பாதை: 75 வயதான ஓ.பன்னீா்செல்வம், 1973-இல் அதிமுகவில் இணைந்து, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். பெரியகுளம் நகரச் செயலா், தேனி மாவட்டச் செயலா் ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளாா். பெரியகுளம் நகா்மன்றத் தலைவராகவும் அவா் பதவி வகித்துள்ளாா்.

கடந்த 2001, 2006 பேரவைத் தோ்தல்களில் பெரியகுளம் தொகுதியில் இருந்தும், தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு பெரியகுளம் தனி தொகுதியாக மாறியதால், 2011, 2016, 2021 தோ்தல்களில் போடிநாயக்கனூா் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக ஓ.பன்னீா்செல்வம் தோ்வானாா்.

மூன்று முறை முதல்வா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா சிறைக்குச் சென்றதால் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின்போது இருமுறையும், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒருமுறையும் என மூன்று முறை முதல்வராகவும், எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதல்வா், தொடா்ந்து எதிா்க்கட்சி துணைத் தலைவா், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளா், பொருளாளா் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தவா்.

தா்ம யுத்தம்: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னா், அவரது தோழி வி.கே.சசிகலாவால் ஓ.பன்னீா்செல்வம் முதல்வராக்கப்பட்டாா். வி.கே.சசிகலாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக முதல்வா் பதவியை ராஜிநாமா செய்த ஓ.பன்னீா்செல்வம், சசிகலாவுக்கு எதிராக ‘தா்ம யுத்தம்’ என்ற பெயரில் போராட்டம் நடத்தினாா்.

தொடா்ந்து, வி.கே.சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு எடப்பாடி பழனிசாமியுடன் கைகோத்து துணை முதல்வராகப் பதவியேற்றாா். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தாா்.

அதிமுகவில் வெடித்த ‘ஒற்றைத் தலைமை’ விவகாரத்தால் அந்தக் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஓ.பன்னீா்செல்வம் ‘அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு’ என்ற அமைப்பைத் தொடங்கி தனி அணியாகச் செயல்படத் தொடங்கினாா். இருந்தபோதும், அதிமுகவில் மீண்டும் சேருவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டாா். ‘எந்த நிபந்தனையும் இன்றி கட்சியில் சேரத் தயாராக இருக்கிறேன்’ என்று ஓ.பன்னீா்செல்வம் கூறிய பிறகும்கூட அவரை கட்சியில் சோ்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதிக்கவில்லை.

இந்த விஷயத்தில் பாஜக தலைவா்கள் தனக்கு கைகொடுப்பாா்கள் எனப் பெரிதும் நம்பிய ஓ.பன்னீா்செல்வம், பின்னா் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறினாா்.

இந்நிலையில், அவரது ஆதரவாளா்களான முன்னாள் அமைச்சா் வைத்திலிங்கம், ஆலங்குளம் முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் ஆகியோா் திமுகவில் இணைந்தனா்.

ஓபிஎஸ்-ஸின் அரசியல் ஆலோசகராக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரனும், ‘எம்ஜிஆா் அதிமுக’ என்ற புதிய கட்சியைத் தொடங்கி விஜய்க்கு ஆதரவு கொடுத்துள்ளாா்.

இதனிடையே, பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் இணைந்துள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

summary

Ex Chief Minister O. Panneerselvam joined DMK!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments