குஜராத் : கழிவுநீர்த் தொட்டியில் விஷவாயு தாக்கியதால் துப்புரவு பணியாளர் பலி!
குஜராத் மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவு பணியாளர் ராஜேஷ் உயிரிழந்தார்.
குஜராத் மாநிலம் பாவ்நகரில், கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது விஷவாயு தாக்கி 45 வயதான துப்புறவு பணியாளர் பலியானார். மற்றொரு பணியாளர் விஷவாயு தாக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தின் வளாகத்தில் துப்புரவு பணிகள் நடைபெற்று வந்தன. பாவ்நகர் நகராட்சியின் துப்புரவு பணியாளர்கள் அந்த வளாகத்தில் உள்ள கழிநீர்த் தொட்டியை சுத்தம் செய்துகொண்டிருந்தனர். ஜெட்டிங் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றதாக நகராட்சி ஆணையர் என்.வி உபத்யாய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அதிகாரிகள் 'ஆய்வகத்தின் துப்புரவு பணியாளர் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கியுள்ளார். அப்போது விஷவாயு அவரைத் தாக்கியுள்ளது. அவரைக் காப்பாற்றுவதற்காக ராஜேஷ் வேகத் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவரைக் காப்பாற்றி வெளியேற்றிய ராஜேஷ் வெளியே வருவதற்குமுன் மூச்சுத் திணரல் ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார்' எனத் தெரிவித்துள்ளனர்.
Advertisement
மரணம் குறித்த கூடுதல் விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பலியான ராஜேஷின் தம்பி தீபக் வேகத், 'ஜெட்டிங் இயந்திரம் இருந்தபோது எதற்காக என் அண்ணனை தொட்டிக்குள் இறங்க அனுமதித்தார்கள்' எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அந்தக் குடும்பத்தின் ஒரே வருவாய் ஈட்டும் நபராக ராஜேஷ் இருந்துள்ளார். எனவே அவரது குடும்பத்திற்கு தகுந்த இழப்பீட்டுத் தொகையை உறுதி செய்ய வேண்டும் எனவும் ராஜேஷின் மகனுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் தீபக் கேட்டுக்கொண்டுள்ளார்.