இந்தியா

உதய்பூர் தையல்காரர் கொலையில் பா.ஜ.க. தொடர்புடையோர்! அசோக் கெலாட் குற்றச்சாட்டு

DIN

உதய்பூர் கன்னையா லாலைக் கொன்றவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என அசோக் கெலாட் குற்றம் சாட்டினார். 

இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக தலைவர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டதாகக் கூறி, 2022 ஜூன் 28ஆம் தேதி, கன்னையா லால் உதய்பூரில் உள்ள அவரது கடையில் வைத்து பட்டப்பகலில் இரண்டு நபர்களால் தலை துண்டித்து கொல்லப்பட்டார். 

உதய்பூர் தையல்காரர் கன்னையா லாலை கொலை செய்தவர்கள் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டினார். ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மதக் கலவரத்தை உருவாக்க பாஜக முயற்சிப்பதாக அவர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை ஜோத்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “தேசிய புலனாய்வு அமைப்புக்கு பதிலாக, ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு செயல்பாட்டுக் குழு இந்த வழக்கைக் விசாரித்திருந்தால், விசாரணை சரியான முறையில் நடந்திருக்கும் என்று கூறினார்.

நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறாக பேசியதற்காக நூபுர் சர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து உதய்பூரில் கொலை சம்பவம் நடைபெற்றது. உதய்பூர் தையல்காரரின் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்த வழக்கு முதலில் உதய்பூரில் உள்ள தன்மண்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் ஜூன் 29, 2022 அன்று தேசிய புலனாய்வு முகமையால் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.

சம்பவம் நடந்த உடனேயே என்ஐஏ இந்த வழக்கை எடுத்துக்கொண்டதாகவும், அதற்கு மாநில அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் அசோக் கெலாட் கூறினார்.

"இந்த வழக்கில் என்.ஐ.ஏ என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது யாருக்கும் தெரியாது. மாநில காவல்துறை இந்த வழக்கு விசாரணையை தொடர்ந்திருந்தால் குற்றவாளிகள் இப்போது நீதியின் முன் நிறுத்தப்பட்டிருப்பார்கள்" என்று முதல்வர் கெலாட் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

ஜூன் 28 அன்று உதய்பூரில் உள்ள மால்டாஸ் பகுதியில் இந்த கொடூரமான கொலை நடந்தது. கொலை செய்தபிறகு அதுகுறித்து விடியோ வெளியிட்ட கொலையாளிகள் பிரதமரை அச்சுறுத்தும் விதத்திலும் அந்த விடியோவில் பேசினர். 

சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டனர். குற்றவாளிகள் இருவரும் தங்களை ரியாஸ் அக்தாரி மற்றும் கவுஸ் முகமது என அடையாளப்படுத்திக் கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

"உதய்பூர் தையல்காரர் கொலை சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, வேறொரு வழக்கில் இதே குற்றவாளிகளை போலீஸார் கைது செய்தபோது, அவர்களை விடுவிப்பதற்காக சில பாஜக தலைவர்கள் காவல் நிலையத்திற்குச் சென்றனர்" என்று அசோக் கெலாட் கூறினார்.

தேர்தலில் தோல்வியடையப் போவதை முன்கூட்டியே உணர்ந்த பாஜக சர்ச்சையான கருத்துகளை முன்வைக்கிறது. நாங்கள் அறிமுகப்படுத்திய திட்டங்கள் பற்றி அவர்கள் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவர்கள் பிரச்சனையை கிளப்பவே விரும்புகிறார்கள். தேர்தலின்போது, ​​மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்று முதல்வர் கூறினார்.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ஆம் தேதி தேர்தல் நடைபெறும். டிசம்பர் 3-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயலக தமிழர்கள் பதிவு செய்ய அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

SCROLL FOR NEXT