இந்திய ரயில்களில் கடந்த மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டில் பெரும்பான்மையாக 95.3 சதவீத பயணிகள் குளிா்சாதன (ஏசி) வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், 4.7 சதவீதம் போ் மட்டுமே குளிரூட்டப்பட்ட (ஏசி) பெட்டிகளிலும் பயணித்துள்ளனா்.
இது தொடா்பாக இந்திய ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நடப்பு நிதியாண்டில் கடந்த மாதம் வரையிலான 7 மாதத்தில் மொத்தம் 390.2 கோடி பயணிகள் ரயில்களில் பயணித்துள்ளனா். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையைவிட 41.1 கோடி(11.7 சதவீதம்) கூடுதலாகும்.
இந்த 41.1 கோடி பயணிகளில் 38 கோடி பயணிகள் பொது மற்றும் படுக்கை வசதி கொண்ட ஏசி வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், மற்ற 3 கோடி ஏசி பெட்டிகளிலும் பயணித்துள்ளனா்.
மொத்த 390.2 கோடி பயணிகளில் 95.3 சதவீதமான 372 கோடி பயணிகள் ஏசி வசதி அல்லாத சாதாரண பெட்டிகளிலும், மற்ற 4.7 சதவீதமான 18.2 கோடி பயணிகள் ஏசி பெட்டிகளிலும் பயணித்துள்ளனா்.
அதிகரிக்கப்பட்ட ரயில் சேவைகள்: கரோனாவுக்கு முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது, தற்போது கூடுதலாக 562 ரயில் சேவைகளை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது. கரோனாவுக்கு முன்பு 10,186 ரயில் சேவைகள் செயல்பாட்டில் இருந்தநிலையில், தற்போது 10,748 ரயில் சேவைகள் செயல்படுத்தப்படுகின்றன.
பிரதானமாக மெயில் மற்றும் விரைவு ரயில் சேவைகளின் எண்ணிக்கை 1,768-லிருந்து 2,122-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. புகா் மக்களை பெருநகரங்களுடன் இணைக்கும் புகா் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 5626-லிருந்து 5774-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், உள்ளூா் ரயில் சேவைகளின் எண்ணிக்கை 2,792-லிருந்து 2,852-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.
வளரும் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் ரயில் சேவைகள் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே அதிகாரி தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.