ராஜஸ்தானில் பாஜகவின் கை ஓங்குகிறது: கருத்துக் கணிப்பு
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்று தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி வெற்றி பெற்றாலும் பாஜகவைவிட வெறும் 0.5 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே அதிகமாக பெற்றிருந்தது. இந்த மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து கொண்டு வருகின்றது.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் தூக்கிய போர்க்கொடி காங்கிரஸுக்கு பலவீனமாக அமைந்துள்ளது.
முதல்வர் கெலாட்டுக்கு எதிராக பேரணி, கட்சியின் தலைமைக்கு எதிரான சச்சின் பைலட்டின் கருத்துகள் மக்களிடையே சலிப்பை உண்டாக்கியதன் விளைவு பாஜகவின் செல்வாக்கு தானாக அதிகரித்துள்ளது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளும் அதனையே வெளிப்படுத்தின.
தற்போது பெரும்பாலான ஊடகங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் ராஜஸ்தானில் 100 முதல் 120 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.
அதன்படி, ராஜஸ்தானில் 200 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் பாஜக 100 - 122 இடங்களைப் பிடிக்கும் என்றும் காங்கிரஸ் 62 - 85 இடங்களையும், மற்றவை 14 - 15 இடங்களை பிடிக்கும் என்று ஜன் கி பாத் தெரிவித்துள்ளது.
டிவி 9 வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் 100 - 110 இடங்களையும், பாஜக 90 - 100 இடங்களையும் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பில், பாஜக 100 முதல் 110 இடங்களையும், காங்கிரஸ் 90 - 100 இடங்களையும் பிடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.