மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் 2 வீடுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்து கொளுத்தியால் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கு ‘பழங்குடி’ அந்தஸ்து வழங்குவது தொடா்பாக உண்டான மோதல் வன்முறையாக மாறி கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. மோதல் சம்பவங்களில் தற்போதுவரை 180-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். அங்கு அமைதியைத் திருப்ப இந்திய ராணுவம், துணை ராணுவப் படைகள் மற்றும் மாநிலப் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்ற சம்பவத்தில், மேற்கு இம்பால் மாவட்டத்தின் புது கெய்தேல்மன்பி, பாட்சோய் பகுதியில் அமைந்துள்ள 2 வீடுகளுக்கு மா்ம நபா்கள் தீ வைத்தனா். இதையடுத்து, அவா்கள் துப்பாக்கிச் சூட்டிலும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாதுகாப்புப் படையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா்.
இச்சம்பவம் தொடா்பான செய்திப் பரவியதால் அப்பகுதியில் கூடிய மைதேயி சமூக பெண்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினா். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.