முகப்பு
இந்தியா

நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு கே.சி.ஆர் அரசு: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு தெலங்கானாவில் உள்ள கே. சந்திரசேகர் ராவ் அரசு தான் என்றும், அது ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:11 AM
பகிர்:

புபல்பள்ளி:​ (தெலங்கானா):  நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு தெலங்கானாவில் உள்ள கே. சந்திரசேகர் ராவ் அரசு என்றும், அது ஒரே குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை குற்றம் சாட்டினார்.

தெலங்கானாவில் நவம்பா் 30-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறும் நோக்கில் சந்திரசேகா் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், பாஜக ஆகியவையும் தோ்தல் களத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. எனினும், காங்கிரஸ் கட்சியே பாரத ராஷ்டிர சமிதிக்கு பிரதான போட்டியாக உள்ளது.

இந்த நிலையில், தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக 3 நாள் பயணமாக தெலங்கானா வந்துள்ள ராகுல் காந்தி, விஜயபேரி யாத்திரையின் போது புபல்பள்ளியில் தொண்டர்களிடையே பேசுகையில், தெலங்கானாவில் மக்கள் ஆட்சி நடக்கும் என கனவு கண்டீர்கள். ஆனால், தெலங்கானாவில் ஒரே குடும்பத்தின் ஆட்சி நடக்கிறது. மாநிலத்தின் முழுக் கட்டுப்பாடும் ஒரே குடும்பத்தின் கையில் உள்ளது. இது தெலங்கானா இளைஞர்கள் மற்றும் பெண்களை மோசமாக பாதிக்கிறது என்றும் நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசு கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசு தான். கடந்த பத்து ஆண்டுகளாக மக்களுக்கும் கே.சி.ஆருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரசேகர ராவ் தோல்வியை சந்திக்கப் போகிறார் என்று  ராகுல் காந்தி கூறினார். 

மேலும், பேரவைத் தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதி வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி விரும்புகிறது என்றும் காங்கிரசுக்கு எதிராக பாஜக, பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகள் ரகசிய கூட்டணி வைத்திருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ராகுல், பிரியங்கா காந்தி இருவரின் மூன்று நாள் பயணத்தின் போது, பொதுக் கூட்டங்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தெலங்கானா காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கணிசமான ஊக்கத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018 -இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், பாரத ராஷ்டிர சமிதி 119 தொகுதிகளில் 88 தொகுதிகளில் வெற்றிபெற்றது மற்றும் 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. காங்கிரஸ் 19 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்து 28.7 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது.

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள ராமப்பா கோயிலில் ராகுல் காந்தியும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் புதன்கிழமை வழிபாடு நடத்தினர்.

தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இப்போது அமலில் உள்ள முக்கியத் திட்டங்கள் அனைத்தையும் முடக்கிவிடும் என்று ஜாட்சோ்லா பகுதியில் புதன்கிழமை பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வா் சந்திரசேகா் ராவ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →