இந்தியா

இடைத்தேர்தல்: பாஜக -3, எதிர்க்கட்சிகள் - 4 தொகுதிகளில் வெற்றி! - முழு விவரம்

நாட்டில் 6 மாநிலங்களில் மொத்தம் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

DIN

நாட்டில் 6 மாநிலங்களில் மொத்தம் 7 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 3 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 

உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம், உத்தரகண்ட், கேரளம், திரிபுரா ஆகிய 6 மாநிலங்களில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கேரளம் - புதுப்பள்ளி

கேரளத்தில் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார். சாண்டி உம்மன் மொத்தம் 80,144 வாக்குகள் பெற்றுள்ளார். இவர் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜெயிக் தாமஸை(42,425)விட 37,719 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 

இதன் மூலமாக சாண்டி உம்மன் தனது தந்தை உம்மன் சாண்டியின் சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் புதுப்பள்ளி தொகுதியில் உம்மன் சாண்டி 33,255 வாக்குகள் வித்தியாசம் என்பதே அதிகபட்சமாக இருந்தது. 

கேரள முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி மறைவையடுத்து புதுப்பள்ளி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. உம்மன் சாண்டி, புதுப்பள்ளி தொகுதியில் 53 ஆண்டுகள் எம்எல்ஏவாகவும், 10 ஆண்டுகள் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். 

திரிபுரா - போக்ஸநகர், தன்புர் 

திரிபுராவில் போக்ஸநகர், தன்புர் ஆகிய இரு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

போக்ஸநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் டஃபஜ்ஜல் ஹுசைன் 34,146 வாக்குகள் பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மிசன் ஹுசைனை(3,909)விட 30,237 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் 66 சதவீதம் வாக்காளர்கள் சிறுபான்மையினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தன்புர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பிந்து தேவ்நாத் 18,871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். தேவ்நாத் 30,017 வாக்குகள் பெறிருந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கௌசிக் சந்தா 11,146 வாக்குகளையே பெற்றார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் திரிபுரா முன்னாள் முதல்வருமான மாணிக் சர்க்காரின் தொகுதியாகும். 

ஜார்க்கண்ட் - டும்ரி

ஜார்க்கண்ட் டும்ரி தொகுதியில் இந்தியா கூட்டணியில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர் பீபி தேவி(1,00,317) வெற்றி பெற்றுள்ளார். இவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஏ.ஜே.எஸ்.யு. கட்சி வேட்பாளர் யசோதா தேவியை(83,164)விட 17,153 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். 

மேற்குவங்கம் - தூப்குரி

மேற்குவங்கம் தூப்குரி தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நிர்மல் சந்திர ராய் பாஜக வேட்பாளர் தபஸி ராயைவிட 4,309 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

நிர்மல் சந்திர ராய் 97,613 வாக்குகளும் எதிர்த்துப் போட்டியிட்ட தபஸி ராய் 93,304 வாக்குகளும் பெற்றனர். முன்னதாக தூப்குரி தொகுதி பாஜகவிடம் இருந்தது. 

உத்தரகண்ட் - பாகேஸ்வர்

உத்தரகண்ட் பாகேஸ்வர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வதி தாஸ்(33,247) காங்கிரஸ் வேட்பாளர் பசந்த் குமாரை(30,842)விட 2,405 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். 

உத்தர பிரதேசம் - கோசி

பாஜகவின் கோட்டையான உத்தர பிரதேசத்தில் கோசி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக பின்னடைவைச் சந்தித்துள்ளது. சமாஜவாதி கட்சியின் வேட்பாளர் 36,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். 

மாலை 6 மணி நிலவரப்படி, 28 சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில், சமாஜவாதி கட்சியின் வேட்பாளர் சுதாகர் சிங் 1,07,524 வாக்குகளும் பாஜக வேட்பாளர் தாரா சிங் 71,781 வாக்குகளும் பெற்றுள்ளனர். 

வாக்கு வித்தியாசம் அதிகம் என்பதால் கோசி தொகுதியில் சமாஜவாதி தனது வெற்றியை உறுதி செய்துள்ளது. 

பாஜக வேட்பாளர் தாரா சிங் சௌகான் கடந்த 2022 தேர்தலில் சமாஜவாதி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர் பாஜகவுக்கு மாறியதால் தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு அவர் அதில் தோல்வியைத் தழுவியுள்ளார்.

உத்தர பிரதேச இடைதேர்தலில் தோல்வி பாஜகவுக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவை வலுப்படுத்த அமித் ஷாவை சந்தித்தேன்! - Sengottaiyan

குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு!

கிழக்கு காங்கோவில் துக்க நிகழ்ச்சியில் ஐ.எஸ். ஆதரவுப் படை தாக்குதல்: 60 பேர் பலி!

ஹிமாசலில் 2 மருத்துவமனைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ரூ. 40,000க்கு கூகுள் பிக்சல் 9! ரூ.33,000 சலுகை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT