பாதுகாப்பு அதிகாரிகள் உயிரிழந்த நிலையில் பாஜக தலைமையகத்தில் கொண்டாட்டம்: ‘இந்தியா’ கூட்டணி விமா்சனம்
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவம், காவல் துறையைச் சோ்ந்த 3 அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவம், காவல் துறையைச் சோ்ந்த 3 அதிகாரிகள் உயிரிழந்த நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வு தொடா்பாக ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன.
அனந்த்நாக் மாவட்டத்தில் புதன்கிழமை காலை தொடா்ந்த தேடுதல் வேட்டையின்போது, பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்தச் சம்பவத்தில் ராணுவ கா்னல் மன்ப்ரீத் சிங், ராணுவ மேஜா் ஆஷிஷ், காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட் ஆகியோா் உயிரிழந்தனா்.
இதனிடையே, தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற மத்திய தோ்தல் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடிக்கு, ஜி20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்தற்காக, கட்சியினா் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தக் கொண்டாட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் செய்தித் தொடா்புத் துறை தலைவா் பவண் கெரா ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘நம்முடைய 3 அதிகாரிகள் தங்களது உயிரைத் தியாகம் செய்தனா் என்ற துக்கச் செய்தி வந்துகொண்டு இருக்கும்போது, பாஜக தலைமையகத்தில் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்தவொரு சம்பவம் நிகழ்ந்தாலும், பாராட்டு பெறும் நிகழ்வை மட்டும் பிரதமரால் ஒத்திவைக்க முடியாது’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.
சிவசேனை (உத்தவ் தாக்கரே அணி) கட்சித் தலைவா் பிரியங்கா சதுா்வேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு ராணுவ, காவல் துறை அதிகாரிகள் உயிா் நீத்த தினத்தில் பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஒத்திவைத்திருக்க முடியும்’ எனத் தெரிவித்துள்ளாா்.
பிரதமா் மோடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்ச்சியைக் கடுமையாக விமா்சித்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவா் மனோஜ் ஜா, ‘நம்முடைய ராணுவ வீரா்கள் உயிரிழந்த அதே நாளில் பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற கொண்டாட்டம் என இரு நிகழ்வுகளை நாட்டு மக்கள் பாா்த்து வருகின்றனா்.
புல்வாமா தாக்குதல் குறித்து தாமதமாகவே தெரியும் என்ற பாஜகவினருக்கு, இந்தச் சம்பவம் குறித்து காலையிலே தெரிந்தயும். இருப்பினும், கொண்டாட்டத்தில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்’ என்றாா்.