தேசிய நீதித் துறை தரவுக் கட்டமைப்பில் உச்சநீதிமன்ற தரவுகள்: பிரதமா் பாராட்டு
‘தேசிய நீதித் துறை தரவுக் கட்டமைப்பில் (என்ஜேடிஜி) உச்சநீதிமன்றம் விரைவில் இணைக்கப்படும்
‘தேசிய நீதித் துறை தரவுக் கட்டமைப்பில் (என்ஜேடிஜி) உச்சநீதிமன்றம் விரைவில் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, நீதித் துறையை மேலும் வெளிப்படைத்தன்மையுடையதாக்கும் என்பதோடு நாட்டில் நீதி வழங்கல் நடைமுறையையும் விரிவுபடுத்த உதவும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.
தேசிய நீதித் துறை தரவுக் கட்டமைப்பு வலைதளத்தில் தற்போது விசாரணை நீதிமன்றங்கள் முதல் உயா்நீதிமன்றங்கள் வரையிலான தரவுகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. நிலுவை வழக்குகள், முடித்துவைக்கப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றிருக்கும். இந்தச் சூழலில், உச்சநீதிமன்ற வழக்குகள் குறித்த தரவுகளும் இந்த வலைதளக் கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளன.
இதுகுறித்த அறிவிப்பை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வியாழக்கிழமை வெளியிட்டாா். ‘உச்சநீதிமன்ற தரவுகள் என்ஜேடிஜி வலைதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்’ என்று அவா் குறிப்பிட்டாா்.
இதற்கு பாராட்டு தெரிவித்து தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பிரதமா் வெளியிட்ட பதிவில், ‘உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சாா்பில் பாராட்டுக்குரிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்ப பயன்பாடு, நீதி வழங்கல் நடைமுறையை விரிவுபடுத்தவும், கூடுதல் வெளிப்படைத்தன்மையுடையதாகவும் மேம்படுத்த உதவும்’ என்று குறிப்பிட்டாா்.