மணிப்பூரில் விடுப்பில் சென்ற ராணுவ வீரர் கடத்தப்பட்டு சுட்டுக் கொலை
கடந்த நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் விடுப்பில் சென்ற ராணுவ வீரர் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுதில்லி: கடந்த நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் விடுப்பில் சென்ற ராணுவ வீரர் கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் செர்டோ தாங்தாங் கோம். இவர் விடுப்பில் தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை 10 மணியளவில் அவரது வீட்டின் தாழ்வாரத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் அவரின் தலையில் துப்பாக்கியை வைத்து வெள்ளை நிற வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளனர். இதை அவரது பத்து வயது மகன் பார்த்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இம்பால் கிழக்கில் உள்ள குனிங்தேக் கிராமத்தில் ராணுவ வீரர் செர்டோ தாங்தாங் கோம் தலையில் குண்டு காயங்களுடன் ஞாயிற்றுக்கிழமை அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
வீரர் கோமுக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர்.
இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "செப் செர்டோ தாங்தாங் கோம் கடத்தி கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இது கோழைத்தனத்தின் கொடூரமான செயல் என்றும் இந்த கடினமான தருணத்தில் அவரது குடும்பத்திற்கு ஆதரவாக நிற்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.