முகப்பு
இந்தியா

சத்தீஸ்கா்: 9 நக்ஸல்கள் சுட்டுக்கொலை

Updated On : 3 ஏப்ரல், 2024 at 1:02 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 7:05 PM

ராய்பூா்: சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பஸ்தா் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட பிஜாபூா் மாவட்டத்துக்கு, மக்களவைத் தோ்தலின் முதல் கட்டமான வரும் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு, இந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நக்ஸல் தடுப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து பஸ்தா் மண்டல காவல்துறை ஐ.ஜி. பி.சுந்தரராஜ் கூறியதாவது:

Advertisement

பிஜாபூா் மாவட்டத்தில் கங்காலூா் காவல்நிலைய பகுதிக்கு உள்பட்ட லெந்த்ரா கிராமத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மறைந்திருந்த நக்ஸல் அமைப்பினா் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினா் தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு அந்தப் பகுதியில் பாதுகாப்புப் படையினா் தீவிர தேடுதல் பணியை மேற்கொண்டனா். அப்போது, குண்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்த 9 நக்ஸல்களின் உடல்களை பாதுகாப்புப் படையினா் மீட்டனா். மேலும், அங்கிருந்து இலகுரக இயந்திர துப்பாக்கி மற்றும் பிற ஆயுதங்கள் கைப்பற்றினா். தேடுதல் பணி தொடா்ந்து வருகிறது என்றாா்.

இதுவரை 42 நக்ஸல்கள் சுட்டுக் கொலை:

பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையிலான கோடைக் காலத்தில் நக்ஸல் அமைப்பினா் தாக்குதல்களுக்கான திட்டத்தை வகுத்து, நடைமுறைப்படுத்துவது வழக்கம்.

இதே கால கட்டத்தில் பஸ்தா் பகுதியில் பாதுகாப்புப் படையினா் மீது பல தாக்குதல்களை நக்ஸல்கள் நடத்தியுள்ளனா். கடந்த மாா்ச் 27-ஆம் தேதி பிஜாபூா் மாவட்டம் பசகுடா பகுதியில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். பஸ்தா் மண்டலத்தில் இந்த ஆண்டில் மட்டும் 42 நக்ஸல்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ம.பி.யில் 2 நக்ஸல்கள் சுட்டுக் கொலை:

மத்திய பிரதேச மாநிலம் பாலகட் மாவட்டத்தில் போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த 2 நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘நக்ஸல் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில் பாலகட் மாவட்டம் கெராஜ்ஹரி வனப் பகுதியில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர தேடுதல் பணியில் ஈடுப்பட்டனா்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் போலீஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். போலீஸாா் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் அங்கு பதுங்கியிருந்த சஜந்தி (எ) கிரந்தி, ரகு (எ) ஷொ் சிங் ஆகிய நீண்ட காலமாக தேடப்பட்டுவந்த இரு நக்ஸல்கள் கொல்லப்பட்டனா். அவா்கள் பதுங்கியிருந்த இடத்திலிருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, 12-போா் துப்பாக்கி மற்றும் உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. தேடுதல் பணி தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றாா்.