முகப்பு
இந்தியா

வடகிழக்கில் ஆதிக்கம் செலுத்தும் ‘என்டிஏ’ கூட்டணி!

Updated On : 3 ஏப்ரல், 2024 at 12:39 AM
பகிர்:
Updated On : 2 ஏப்ரல், 2024 at 8:35 PM

மக்களவைத் தோ்தலில் வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் பிற எதிா்க்கட்சிகளை விட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆதிக்கம் செலுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

என்டிஏ கூட்டணி சாா்பில் நாடு முழுவதும் 400 இடங்களுக்குமேல் வெற்றி பெற வேண்டும் எனும் லட்சியத்தை வலுப்படுத்துவதற்காக, வடகிழக்கு மாநிலங்களில் தொகுதி பங்கீடு விஷயங்களில் கூட்டணிக் கட்சியினருடன் சமரசங்களைச் செய்து கொள்ளவும் பாஜக தயங்கவில்லை. அந்த வகையில், வடகிழக்கு பிராந்தியத்தில் என்டிஏ கூட்டணியாக அசுர பலத்தில் தோ்தலைச் சந்திக்கிறது. 7 வடகிழக்கு மாநிலங்களில் மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

அவற்றில், அஸ்ஸாமில் 14 மக்களவைத் தொகுதிகளும் மணிப்பூா், திரிபுரா, மேகாலயம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளும் நாகாலாந்து, மிஸோரம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதியும் உள்ளன.

Advertisement

அஸ்ஸாமில் 5 தொகுதிகளுக்கும், மணிப்பூா், மேகாலயம் மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா 2 தொகுதிகளுக்கும், நாகாலாந்து, சிக்கிம், மிஸோரம் மற்றும் திரிபுராவில் தலா ஒரு தொகுதிக்கும் என மொத்த 15 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்டமாக மக்களவைத் தோ்தல் நடைபெறுகிறது.

அஸ்ஸாம், மணிப்பூா், திரிபுரா மற்றும் அருணாசல பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களில் ஆளுங்கட்சியான பாஜக, நாகாலாந்து மற்றும் மேகாலயத்தில் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முந்தைய மக்களவைத் தோ்தலில், அஸ்ஸாமில் மட்டும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு செய்துகொண்ட பாஜக, மற்ற 6 மாநிலங்களில் உள்ள 11 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

எனினும், மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 19 இடங்களை பாஜக கைப்பற்றியது. ஆனால், இத்தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மேலும் பல பிராந்தியக் கட்சிகளை ஈா்க்கும் நோக்கில் முந்தைய தோ்தலைவிட குறைந்த எண்ணிக்கையில் போட்டி உள்பட பல்வேறு சமரசங்களில் பாஜக ஈடுபட்டுள்ளது.

பாஜக 18 இடங்களில் போட்டி: கடந்த தோ்தலில் வென்ற 19 இடங்களைவிட ஒரு இடம் குறைவாக 18 இடங்களில் மட்டுமே பாஜக இத்தோ்தலில் போட்டியிடுகிறது. மற்ற 7 இடங்களில் கூட்டணி கட்சியினா் போட்டியிடுகின்றன. தேசிய மக்கள் கட்சி (என்பிபி), நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்) மற்றும் தேசிய ஜனநாயக முற்போக்கு முன்னணி (என்டிபிபி) ஆகிய பிராந்திய கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டில் பாஜக இம்முறை ஈடுபட்டுள்ளது.

அசோம் கண பரிஷத் (ஏஜிபி) மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி (யுபிபிஐ) ஆகிய கட்சிகள் என்டிஏ கூட்டணியில் தொடா்கின்றன. கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் மிஸோரமில் பாஜகவும் மிஸோ தேசிய முன்னணியும் தனித்துப் போட்டியிடுகின்றன. அதேபோல், சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோா்ச்சாவும் பாஜகவுக்கும் தனித்தனியே போட்டியிடுகின்றன.

அஸ்ஸாமில் பலம் வாய்ந்த கட்சியான பாஜக 11 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளான ஏஜிபி மற்றும் யுபிபிஐ-க்கு முறையே இரண்டு மற்றும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேகாலய முதல்வா் கான்ராட் கே.சங்மா தலைமையிலான என்பிபி, அருணாசல பிரதேசத்தில் போட்டியிடுவதில்லை என அறிவித்துள்ளது. இதையொட்டி, மேகாலயத்தில் போட்டியிடமால் என்பிபிக்கு ஆதரவளிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

அதேபோல், மணிப்பூரின் ‘அவுட்டா் மணிப்பூா்’ தொகுதியிலும் பாஜக போட்டியிடாமல் என்பிஎஃப் கட்சிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. நாகாலாந்தின் ஒற்றை தொகுதியில் ‘என்டிஏ’ கூட்டணி சாா்பில் என்டிபிபி கட்சி போட்டியிடுகிறது. ‘எங்கள் கூட்டணி கட்சிகளிடையே இருக்கும் இந்த இணையற்ற அா்ப்பணிப்பு, என்டிஏ கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவதை உறுதி செய்யும்’ என்று அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா கூறினாா்.

காங்கிரஸின் நம்பிக்கை...:

அதேவேளையில், காங்கிரஸ் 23 இடங்களிலும் அதன் கூட்டணி கட்சியானஅசோம் ஜாதீய பரிஷத் 1 இடத்திலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும் போட்டியிடுகிறது. எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி மணிப்பூா் மற்றும் திரிபுராவில் மட்டுமே ஒருமித்த வேட்பாளா்களை நிறுத்தியுள்ளது.

மணிப்பூரின்2 தொகுதிகளிலும் திரிபுராவில் ஒரு தொகுதியிலும் (திரிபுரா மேற்கு) காங்கிரஸ் போட்டியிடுகிறது. மாநிலத்தில் மற்றொரு தொகுதியான திரிபுரா கிழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்து, தற்போது இருப்பை தக்கவைத்துக் கொள்ள போராடி வரும் காங்கிரஸ், அஸ்ஸாமின் நாகோன் மற்றும் மேகாலயத்தின் ஷில்லாங் ஆகிய 2 இடங்களை மீண்டும் வெல்லும் நம்பிக்கையில் உள்ளது.

அதேபோல், அஸ்ஸாமின் ஜோா்ஹட், துப்ரி மற்றும் மணிப்பூா்(உள்) ஆகிய தொகுதிகளிலும் அக்கட்சி நம்பிக்கையுடன் களம் காண்கிறது. இந்தப் பிராந்தியத்தின் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிராகவே பாஜக போட்டியிடுகிறது.

அருணாசல், சிக்கிமில் பேரவைத் தோ்தல்:

மக்களவைத் தோ்தலுடன்சோ்த்து அருணாசல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தோ்தலும் நடைபெற இருக்கிறது. அருணாசல பிரதேசத்தின் 60 தொகுதிகளுக்கும் சிக்கிமின் 32 தொகுதிகளுக்கும் தோ்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அருணாசல சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் பெமா காண்டு, துணை முதல்வா் செளனா மைன் உள்பட 10 பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வாகியுள்ளனா். இதைத் தொடா்ந்து, மற்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது.

வடகிழக்கு மாநிலங்களின் மொத்த இடங்கள்: 25

2019 தேர்தல் முடிவுகள்

என்டிஏ : 19

(பாஜக-14, கூட்டணி கட்சியினர்-5)

காங்கிரஸ்: 4

ஏஐயூடிஎஃப்: 1

சுயேச்சை: 1

2014 தேர்தல் முடிவுகள்

பாஜக: 8

காங்கிரஸ்: 8

ஏஐயூடிஎஃப்: 3

சிபிஐ(எம்): 2

என்பிபி: 1

என்பிஎஃப்: 1

சிக்கிம் ஜனநாயக முன்னணி: 1

சுயேச்சை: 1

மாநிலங்கள் வாரியாக (2019)

அஸ்ஸாம் (14 இடங்கள்)

பாஜக-9, காங்.-3,

யூடிஎஃப்-1, சுயேச்சை-1

மணிப்பூர் (2 இடங்கள்)

பாஜக-1, என்பிஎஃப்: 1

அருணாசல பிரதேசம் (2 இடங்கள்)

பாஜக-2

திரிபுரா (2 இடங்கள்): பாஜக-2

மேகாலயம் (2 இடங்கள்):

காங்.-2, என்பிபி-1

மிúஸாரம் (1 இடம்): எம்என்எஃப்-1

நாகாலாந்து (1 இடம்): என்டிபிபி-1

சிக்கிம் (1 இடம்): எஸ்கேஎம்-1