புது தில்லி: சட்டவிரோத குவாரி மணல் விற்பனை தொடர்புடைய பணமோசடி விசாரணை விவகாரத்தில் அமலாக்கத் துறை முன் விசாரணைக்கு ஆஜராகாத தமிழகத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மீது உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கடும் அதிருப்தி தெரிவித்தது.
அதேவேளையில், பொதுத் தேர்தல் செயல்பாடுகளைக் கருத்தில்கொண்ட நீதிமன்றம், ஏப்ரல் 25-ஆம் தேதி அமலாக்கத் துறை முன் அவர்கள் கட்டாயம் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளியதாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில், வேலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இதை எதிர்த்து மாநில அரசும், மாவட்ட ஆட்சியர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்குத் தடை விதித்து கடந்த ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தாக்கலான அமலாக்கத் துறையின் மேல்முறையீட்டு மனுவை கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு, "அமலாக்கத் துறையின் அழைப்பாணைகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த "ரிட்' மனு தவறாகப் புரிந்து கொண்டும், தவறான கருத்தின் அடிப்படையிலும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு முகாந்திரம் இருப்பதாகத் தோன்றுகிறது' என்று தெரிவித்திருந்தது. மேலும், அமலாக்கத்துறை அழைப்பாணக்கு மதிப்பளித்து மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. எனினும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனிடையே, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பேலா எம். திரிவேதி, பங்கஜ் மிட்டல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் அமர்வு, "நாங்கள் உத்தரவிட்டிருந்தபோதிலும் அமலாக்கத் துறை முன் 5 மாவட்ட ஆட்சியர்களும் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தது சரியல்ல. அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்கவில்லை என்று தோன்றுகிறது. மேலும், அவர்களின் செயலானது நீதிமன்றம், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் மீது எந்த மரியாதையும் இல்லை என்பதைக் காட்டுகிறது. எங்கள் கருத்துப்படி, இத்தகைய சூழலைப் புரிந்துகொள்ளாத அணுகுமுறை அவர்களை கடினமான சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.
அமலாக்கத் துறை அனுப்பிய அழைப்பாணைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவர்கள் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தபோது, அவர்கள் அந்த உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து அமலாக்கத் துறை முன் ஆஜராக வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் அல்லது சட்டம் அல்லது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது மரியாதை இல்லை என்பதை இது காட்டுகிறது. அத்தகைய அணுகுமுறை கடுமையாக நிராகரிக்கப்படுகிறது' என்று அதிருப்தியுடன் கூறியது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் வாதிடுகையில், பொது ஒழுங்கை பராமரிப்பதிலும், சமூக பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துவதிலும் அதிகாரிகள் மும்முரமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் பணிகளை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர் என்றனர்.
அப்போது, மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை முன் ஆஜராகி காரணங்களை விளக்கியிருக்க வேண்டும் என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. மேலும், பணமோசடி விசாரணை தொடர்பாக அமலாக்கத் துறை முன் ஏப்ரல் 25-ஆம் தேதி ஆஜராக அதிகாரிகளுக்கு கடைசி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் அமர்வு கூறி, வழக்கு விசாரணையை மே 6-ஆம் தேதிக்குத் ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.