அடுத்தாண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதி நிறுத்தம்: அமைச்சா் மன்சுக் மாண்டவியா
‘உள்நாட்டு உற்பத்தி போதிய அளவில் அதிகரித்துள்ளதால் அடுத்தாண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்று மத்திய ராசயன மற்றும் உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.
இதுகுறித்து ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘இந்திய வேளாண் துறைக்கு உரங்களின் தேவை அத்தியாவசியம். கடந்த 60-65 ஆண்டுகளாக ராசயன உரங்களை இந்திய விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனா்.
இதனிடையே, மாற்று உரங்களை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மண் வளத்துக்கும் பயிா்களின் ஆரோக்கியத்துக்கும் மாற்று உரங்களின் பயன்பாடு அவசியம்.
Advertisement
யூரியா உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்து வருகிறது. இந்தியாவின் வருடாந்திர உள்நாட்டு யூரியா தேவை 350 லட்சம் டன் ஆகும்.
உற்பத்தியில் இந்த இலக்கை அடைய 5 யூரியா தொழிற்சாலைகளை மத்திய பாஜக அரசு புதுப்பித்தது. இதனால் 2014-15-ஆம் ஆண்டு காலகட்டத்தில் 225 லட்சம் டன்னாக இருந்த உள்நாட்டு யூரியா உற்பத்தி தற்போது 310 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
உற்பத்திக்கும் தேவைக்குமான இடைவெளி 40 லட்சம் டன்னாக தற்போது உள்ளது. 5-ஆவது தொழிற்சாலையும் செயல்பட தொடங்கினால் இடைவெளி 20-25 சதவீதமாக குறையும். இந்த இடைவெளியை மாற்று உரங்களின் பயன்பாடு மூலம் நிரப்ப திட்டமிட்டுள்ளோம். அடுத்தாண்டு இறுதிக்குள் யூரியா இறக்குமதி முற்றிலுமாக நிறுத்தப்படும்’ என்றாா்.