சட்டவிரோதமாக ஆயுதங்கள் வாங்கிய வழக்கு: லாலுவுக்கு எதிராக கைது ஆணை
சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்கிய வழக்கு தொடா்பாக பிகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத்துக்கு எதிராக மத்திய பிரதேச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிரந்தர கைது ஆணை பிறப்பித்தது.
கடந்த 1995 முதல் 1997-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில், போலி ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் வாங்கப்பட்டது தொடா்பாக, மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள காவல் நிலையத்தில் லாலு பிரசாத் உள்பட 23 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பான வழக்கு குவாலியரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு லாலு தரப்பில் எவரும் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு எதிராக நிரந்தர கைது ஆணை பிறப்பித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
Advertisement
ஒருவருக்கு எதிராக நிரந்தர கைது ஆணை பிறப்பிக்கப்பட்டால், அவரை கைது செய்யும்போது கட்டாயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று அரசுத் தரப்பு சிறப்பு வழக்குரைஞா் அபிஷேக் மெஹரோத்ரா தெரிவித்தாா்.