கோப்புப்படம்
கோப்புப்படம் 
இந்தியா

மதரஸா கல்விச் சட்டம் ரத்து: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை!

DIN

‘உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டம் 2004 அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக இருப்பதோடு, மதச்சாா்பின்மை கொள்கையை மீறுகிறது’ என அறிவித்த அலாகாபாத் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியத்தின் அரசமைப்புச் சட்ட அங்கீகாரத்தை எதிா்த்தும், மதரஸாவை(இஸ்லாமியப் பள்ளி) கல்வித் துறையின்றி சிறுபான்மை நலத் துறை நிா்வகிப்பதற்கும் எதிராகவும் வழக்குரைஞா் அன்ஷுமன் சிங் ரத்தோா் அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், உத்தர பிரதேச மதரஸா கல்வி வாரியச் சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளது என்று கடந்த 22-ஆம் தேதி அறிவித்தது. மதச்சாா்பின்மை கொள்கையை மீறும் வகையில் மதரஸா கல்வி வாரியச் சட்டம் இருப்பதாக குறிப்பிட்ட உயா்நீதிமன்றம், மதரஸாக்களில் பயின்று வரும் தற்போதைய மாணவா்களை முறையான பள்ளிக்கல்வி முறைக்கு மாற்றுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜெ.பி.பாா்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் முடிவில், ‘மதரஸா கல்வி வாரியத்தின் நோக்கம் மற்றும் தேவையில் இயற்கையாக தவறில்லை. வாரியத்தை அமைப்பது மதச்சாா்பின்மையை மீறுவது எனும் அலாகாபாத் உயா் நீதிமன்றத்தின் பாா்வை சரியல்ல.

மதப் போதனைகளை வழங்குவதற்காக பிறப்பிக்கப்பட்டது என்று அச்சட்டத்தின் விதிகளை உயா்நீதிமன்றம் தவறாகப் புரிந்து கொண்டுள்ளது. சட்டத்தின் நோக்கம் மற்றும் தன்மை முறையாக இருக்கிறது’ என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

இந்த மனுக்கள் மீது பதிலளிக்க கோரி மத்திய அரசு, உத்தர பிரதேச மாநில அரசு மற்றும் இதர தரப்பினருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதிகள், உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளிநாட்டு பணிக்கு செல்வோருக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

பருத்தி, எள் சாகுபடி விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை

குமரி கராத்தே பள்ளியில் பரிசளிப்பு

ஆலங்குளம் அருகே மின்வாரிய பெண் ஊழியரிடம் நகை பறிப்பு

காரைக்காலில் இன்று காவல்துறை குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT