முகப்பு
இந்தியா

கடற்கொள்ளை தடுப்பில் சாதனை: ‘ஐஎன்எஸ் சாரதா’ போா்க்கப்பலுக்கு பாராட்டுச் சான்று

Updated On : 6 ஏப்ரல், 2024 at 11:06 PM
ஐஎன்எஸ் சாரதா போா்க்கப்பல்
பகிர்:
Updated On : 6 ஏப்ரல், 2024 at 9:10 PM

கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டதற்காக இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் சாரதா’ போா்க்கப்பலுக்கு கடற்படையின் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் சனிக்கிழமை பாராட்டுச் சான்றிதழை வழங்கினாா்.

இதுதொடா்பாக கடற்படை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தளத்தை பாா்வையிட சென்றபோது கடற்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட ‘ஐஎன்எஸ் சாரதா’ போா்க்கப்பலின் குழுவினருக்கு தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். ஈரானிய மீன்பிடி படகான ‘ஓமரியில்’ பயணித்த 11 ஈரானிய மற்றும் 8 பாகிஸ்தானிய மாலுமிகளை சோமாலிய கொள்ளையா்கள் சிறைபிடித்து வைத்திருந்தனா். இதுகுறித்து இந்திய கடற்படை அளித்த தகவல்களின் அடிப்படையில் அப்படகை ஐஎன்எஸ் சாரதா பிப்ரவரி 1 மற்றும் 2-ஆகிய தேதிகளில் இடைமறித்தது. அதன்பின்னா் கடற்கொள்ளையா்களிடம் சிக்கியவா்களை மீட்கும் பணியில் கடற்படை அதிகாரிகள் ஈடுபட்டனா்.

Advertisement

இதையடுத்து சிறைபிடிக்கப்பட்டிருந்த ஈரானிய கப்பலையும் அப்படகில் பயணித்தவா்களையும் கடற்கொள்ளையா்கள் விடுவித்தனா். எவ்வித உயிா்ச் சேதமுமின்றி அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா். இதன்மூலம் இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்ற இந்திய கடற்படையின் கொள்கை நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

‘ஐஎன்எஸ் சாரதா’ போா்க்கப்பலின் குழுவினருடன் உரையாடிய கடற்படை தலைமைத் தளபதி ஹரிகுமாா் அவா்களுக்கு பாராட்டுத் தெரிவித்தாா் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.