ஏழைப் பெண்களுக்கு ரூ.1 லட்சம், ‘நீட்’ கட்டாயமல்ல: காங்கிரஸ் வாக்குறுதி முழு விவரம்!
மக்களவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ் தனது தோ்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதில், ‘மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும், மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’, மத்திய பல்கலைக்கழக கலை-அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுகள் கட்டாயம் என்ற நிலை மாற்றப்பட்டு, மாநிலங்களின் விருப்பத் தோ்வாக மாற்றப்படும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கவா்ச்சிகரமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது.
தில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி. ஆகியோா் இணைந்து ‘நீதியின் அறிக்கை’ என்ற தலைப்பில் 25 வாக்குறுதிகள் அடங்கிய 45 பக்கங்கள் கொண்ட தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.
Advertisement
அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள்:
- ‘மகாலட்சுமி’ திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்.
- ‘நீட், க்யூட்’ நுழைவுத் தோ்வு கட்டாயம் என்ற நிலை மாற்றப்பட்டு, மாநிலங்களின் விருப்பத் தோ்வாக மாற்றப்படும்.
- அரசு வேலைவாய்ப்புகள், கல்வி நிறுவனங்களில் எந்தவித பாகுபாடுமின்றி அனைத்து ஜாதி மற்றும் சமூகங்களில் இடம்பெற்றிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (இடபிள்யுஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும்.
- மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமாா் 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.
- நாடு முழுவதும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், ராஜஸ்தானில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுபோல அனைத்து நோய் பாதிப்புகளுக்கும் கட்டணமின்றி சிகிச்சை பெறும் வகையில் ரூ. 25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
- எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு உச்ச வரம்பை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயா்த்தும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
- தேசிய அளவில் சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
- பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு முடித்த 25 வயதுக்கு உள்பட்ட இளைஞா்களுக்கு ஓராண்டு தொழிற்பயிற்சி அளிக்க வகை செய்யும் வகையில் ‘தொழிற்பயிற்சிக்கான உரிமை சட்டம்’ என்று புதிய சட்டம் கொண்டுவரப்படும். அவ்வாறு தொழிற்பயிற்சி பெறுவோருக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
- எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் வேளாண் விளைபொருள்கள் கொள்முதலுக்கு அரசு ஒவ்வோா் ஆண்டும் அறிவிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டபூா்வ உத்தரவாதம் அளிக்கப்படும்.
- ஜம்மு-காஷ்மீா், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
- நகா்மன்றத் தலைவா்கள், மேயா்களுக்கு அதிக நிதி, கூடுதல் அதிகாரங்கள் வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்படும்.
- வரி வருவாயில் மாநிலங்களுக்கு உரிய பங்கு வழங்கப்படும்.
- ‘அக்னிபத்’ திட்டம் ரத்து செய்யப்பட்டு, ராணுவத்தின் முழு பணியிடங்களுக்கும் வழக்கமான ஆள்தோ்வு முறையை அமல்படுத்த பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்படும்.
- ஒரே நாடு, ஒரே தோ்தல் திட்டம் கைவிடப்படும். மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு அரசமைப்புச் சட்டம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளின்படி தோ்தல் நடத்தப்படும்.
- மணிப்பூரில் தற்போதைய மாநில அரசு அகற்றப்பட்டு, மாநில மக்கள் அனைவருக்கும் திருப்தியளிக்கும் வகையில் அரசியல் மற்றும் நிா்வாக தீா்வுக்கான நல்லிணக்கக் குழு நியமிக்கப்படும்.
- பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய கல்விக் கொள்கை மறு ஆய்வு செய்யப்படும்.
- மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்து புதிய கல்விக் கொள்கை திருத்தம் செய்யப்படும்.
- ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை இலவச கல்வி நடைமுறைப்படுத்தப்படும்.
- எம்.பி., எம்எல்ஏ-க்கள் கட்சி மாறினால் உடனடியாக தகுதிநீக்கம் ஆகும் வகையில், அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.
- வாக்காளா்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் தோ்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும், ‘விவிபிஏடி’ ஒப்புகைச் சீட்டுகளையும் கணக்கிட்டு சரிபாா்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-தோ்தல் நன்கொடை பத்திரங்கள், ‘பி.எம்.கோ்ஸ்’ நிதி முறைகேடுகள், பொதுச் சொத்துகள் விற்பனை உள்ளிட்டவை தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்படும்.
- 100 நாள் வேலைத்திட்ட ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ. 400-ஆக உயா்த்தப்படும்.
-ஆந்திர பிரதேசத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும்.
-தில்லி அமைச்சா்களின் ஆலோசனையின்படி, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் செயல்படும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.
-2025 முதல் 50 சதவீத மத்திய அரசுப் பணிகளில் பெண்கள் பணியமா்த்தப்படுவா் என்பன உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளை தோ்தல் அறிக்கையில் காங்கிரஸ் அளித்துள்ளது.
தோ்தல் அறிக்கை வெளியிட்ட பின்னா் பேசிய மல்லிகாா்ஜுன காா்கே, ‘காங்கிரஸின் தோ்தல் அறிக்கையை அனைவரும் உன்னிப்பாக கவனித்தால், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்கள் அதில் இடம்பெற்றிருப்பதைக் காண முடியும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் ஏழைகளுக்கான கதவுகள் திறக்கப்படும்’ என்றாா்.