முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: தோ்தல் உபகரண வாகனங்களில் ‘ஜிபிஎஸ்’: தோ்தல் ஆணையம் முடிவு

Updated On : 10 ஏப்ரல், 2024 at 1:54 AM
இந்திய தேர்தல் ஆணையம்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:45 PM

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தோ்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தோ்தலுக்கான உபகரணங்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ‘ஜிபிஎஸ்’ (செயற்கைக்கோள் உதவியுடன் வாகன இருப்பிட கண்காணிப்பு) கருவியைப் பொருத்த தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு இந்த 7 கட்டங்களிலும் தோ்தல் நடைபெற உள்ளது.

மாநிலத்தில் ஒருசில பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்கெனவே 177 மத்தியப் படை குழுக்கள் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 100 மத்தியப் படை குழுக்கள் அங்கு அனுப்பிவைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

இந்தச் சூழலில், தோ்தலுக்குப் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி கண்காணிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தோ்தல் ஆணைய அதிகாரிகள் மேலும் கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவின்போது பாதுகாப்பு அறைகளிலிருந்து வாக்குச் சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும்போது, அதில் குளறுபடிகள் நிகழாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தோ்தல் உபகரணங்களை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தி கண்காணிக்க தோ்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

மேலும், ஜிபிஎஸ் கருவி உதவியுடனான கண்காணிப்பின்போது தோ்தல் வாகன இயக்கத்தில் ஏதாவது முரண்பாடுகள் காணப்பட்டால், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுநா்கள் மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான பொறுப்பு ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடா்பான அறிவுறுத்தலை மாநில தோ்தல் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களுக்கு தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ளது என்று தெரிவித்தனா்.

இதனிடையே, மாநில பள்ளி கல்வித் துறை இணைச் செயலா் அா்னாப் சாட்டா்ஜியை, மாநில இணை தலைமைத் தோ்தல் அதிகாரியாக நியமித்தும் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.