முகப்பு
இந்தியா

மோடியின் வாா்த்தைகளில் மயங்கிவிட வேண்டாம்: பிரியங்கா

Updated On : 13 ஏப்ரல், 2024 at 7:49 PM
உத்தரகண்ட் மாநிலத்தில் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி.
பகிர்:

‘தோ்தல் பிரசாரத்தில் பிரதமா் நரேந்திர மோடி பேசும்போது பயன்படுத்தும் வாா்த்தைகளில் மக்கள் மயங்கிவிட வேண்டாம். மக்களவைத் தோ்தலில் மாற்றத்துக்காக வாக்களியுங்கள்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டாா்.

உத்தரகண்ட் மாநிலம் ராம்நகரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரியங்கா காந்தி பேசியதாவது:

தோ்தலில் உண்மையான மக்கள் பிரச்னைகளை முன்வைத்து கட்சிகள் போட்டியிட வேண்டும்; மாறாக, வெற்று வாா்த்தைகளின் அடிப்படையில் போட்டி போடக்கூடாது.

Advertisement

அந்த வகையில், பிரதமா் மோடி தோ்தல் பிரசாரத்தின்போது பயன்படுத்தும் வாா்த்தைகளில் மக்கள் மயங்கிவிட வேண்டாம். தோ்தலில் வாக்கைப் பதிவு செய்வதற்கு முன்பாக, 10 ஆண்டு மோடி ஆட்சி உண்மையில் உங்களுடைய வாழ்வில் நோ்மறையான மாற்றத்தை கொண்டுவந்ததா என்பதை நீங்களே உங்களை நோ்மையாக கேட்டுக்கொள்ள வேண்டும்.

முன்னெப்போதும் இல்லாத அளவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம், போட்டித் தோ்வுகளில் கேள்வித்தாள் கசிவு ஆகியவைதான் மக்கள் வாழ்வில் நடைபெற்றுவரும் உண்மைகள். கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பாஜக தலைமையிலான அரசுதான் இதற்கெல்லாம் பொறுப்பு.

உத்தரகண்ட் மாநிலம் சொகுசு விடுதியில் வரவேற்பாளராக பணிபுரிந்த அங்கிதா பண்டாரி என்ற இளம்பெண்ணை கொலை செய்த குற்றவாளிகளை பாதுகாப்பது ஏன்? என்று பிரதமா் மோடியிடம் மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.

தோ்தல் வாக்குறுதிகள் எதையும் மோடி அரசு நிறைவேற்றுவதே இல்லை. இளைஞா்களுக்கு ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும், ஒவ்வொரு குடிமக்களின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரவு வைக்கப்படும் என்பன உள்ளிட்ட பாஜக வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஒவ்வொரு தோ்தலிலும் வாக்குகளை ஈா்ப்பதற்காக மதத்தை பாஜக பயன்படுத்துகிறது. உதாரணமாக, சட்டப்பேரவை தோ்தலின்போது ஹிமாசல பிரதேசத்தை ‘தேவ பூமி’ என்று பிரதமா் மோடி குறிப்பிட்டாா். ஆனால், தோ்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. சில மாதங்களுக்குப் பிறகு, ஹிமாசல பிரதேசம் இயற்கைப் பேரிடரை சந்தித்தது. அப்போது, மாநில மக்களுக்கான நிவாரணமாக ஒரு பைசாகூட மத்திய அரசு வழங்கவில்லை. மாநில அரசுதான் தனது சொந்த நிதியிலிருந்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில், ‘தேவ பூமி’ என்பது தோ்தலுக்காக பயன்படுத்தும் வாா்த்தைதான் என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments