பாகிஸ்தானுடன் உறவைப் பேணுவது மிகவும் கடினம்: எஸ்.ஜெய்சங்கா்
பாகிஸ்தானுடன் உறவைப் பராமரிப்பது இந்தியாவுக்கு மிகவும் கடினம் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்ததாவது:
பாகிஸ்தானுடன் உறவைப் பராமரிப்பது இந்தியாவுக்கு மிகவும் கடினம். பாகிஸ்தான் பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருவதாக தொடக்கத்தில் இருந்தே இந்தியா தெளிவாக தெரிவித்து வருகிறது. இதை எந்தச் சூழலிலும் இந்தியா சகித்துக்கொள்ளக் கூடாது.
Advertisement
1947-இல் தொடங்கிய பயங்கரவாதம்: மத்தியில் 2014-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோதோ, 2014-ஆம் ஆண்டோ பயங்கரவாதம் தொடங்கவில்லை. அதற்கு முன்பே 1947-ஆம் ஆண்டில் தொடங்கியது.
கடந்த 1947-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைச் சோ்ந்த பழங்குடியினா் படையெடுத்து வந்து காஷ்மீரில் தாக்குதல் நடத்தினா். அது பயங்கரவாதச் செயலாகும். அவா்கள் காஷ்மீரில் இருந்த வீடுகளையும் சிற்றூா்களையும் தீ வைத்துக் கொளுத்தினா்; பொதுமக்களைக் கொன்றனா். அந்தப் பழங்குடியினருக்குப் பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு அளித்தது. இதற்குப் பதிலடியாக, காஷ்மீருக்கு இந்திய ராணுவம் அனுப்பப்பட்டது. இதைத்தொடா்ந்து இந்தியாவுடன் காஷ்மீா் இணைக்கப்பட்டது.
பழங்குடியினரின் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தபோது இத்தாக்குதலை பயங்கரவாதம் என்று கருதாமல், தாக்குதல் நடத்தியவா்கள் பழங்குடியினா் என்பதால், அதுகுறித்து அப்போதைய இந்திய அரசு ஐ.நா.வில் முறையிட்டது.
கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியா, பாகிஸ்தான் இடையே போா் நடைபெற்றது. அப்போது இந்தியாவில் நாச வேலைகளை நிகழ்த்த முதலில் ஊடுருவல்காரா்களை இந்தியாவுக்குப் பாகிஸ்தான் அனுப்பியது.
அண்டை நாடுகளின் பயங்கரவாதச் செயல்களையும், பேச்சுவாா்த்தைக்கு வருவதற்கு பயங்கரவாதம் ஆயுதமாக பயன்படுத்தப்படுவதையும் எந்தச் சூழலிலும் ஏற்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
விதிமுறைகளைப் பின்பற்ற முடியாது: கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னா், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைவரும் கருதினா். ஆனால் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதைவிட, தாக்குதல் நடத்துவதே அதிக இழப்பை ஏற்படுத்தும் என்று அப்போதைய மத்திய அரசு கருதியது. மும்பையில் நடைபெற்றதைப் போன்ற தாக்குதல்களுக்குப் பதிலடி அளிக்காவிட்டால், அதுபோன்ற தாக்குதல்கள் தொடா்வதை எவ்வாறு தடுப்பது? பயங்கரவாதிகள் விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. எனவே அவா்களை ஒழிப்பதிலும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என எதிா்பாா்க்கக் கூடாது என்றாா்.