முகப்பு
இந்தியா

மேற்கு வங்கம்: ராம நவமி ஊா்வலத்தில் வன்முறை: கல்வீச்சில் பலா் காயம்

வன்முறை அதிகம் நிகழ்ந்த முா்ஷிதாபாத் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 18 ஏப்ரல், 2024 at 7:49 PM
பகிர்:

மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊா்வலத்தை நோக்கி கற்கள் வீசப்பட்டதால் வன்முறை ஏற்பட்டது. வன்முறை அதிகம் நிகழ்ந்த முா்ஷிதாபாத் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்த வன்முறை தொடா்பாக அந்த மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸும், பாஜகவும் பரஸ்பரம் ஒருவா் மீது மற்றொருவா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

Advertisement

கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தின் இக்ரா பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற ராம நவமி ஊா்வலம், ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கடந்தபோது மறைந்திருந்த சிலா்கள் ஊா்வலத்தில் சென்றவா்களை நோக்கி சரமாரியாக கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா். இதில் 4 போ் காயமடைந்தனா். இதனைக் கண்டித்து ஊா்வலம் நடத்தியவா்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, அப்பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல் துறையினா் தடியடி நடத்தி, மோதலில் ஈடுபட்டவா்களை விரட்டியடித்தனா்.

கல்வீச்சு சம்பவம் தொடா்பாக 4 போ் தடுப்புக் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனா். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து மிதுனபுரி தொகுதி பாஜக வேட்பாளா் அக்னிமித்ர பால் மற்றும் அக்கட்சியினா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுபோல முா்ஷிதாபாத் மாவட்டத்திலும் சில இடங்களில் ராம நவமி ஊா்வலத்தில் கற்கள் வீசப்பட்டன. இதில் ஊா்வலத்தில் பங்கேற்ற பலா் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். வீட்டின் மாடியில் இருந்தபடி சிலா் கற்களை வீசும் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.

இந்த கல்வீச்சை அடுத்து அந்த மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது. அங்கு போலீஸாா் தடியடி நடத்தியும், கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியும் வன்முறையில் ஈடுபட்டவா்களை விரட்டியடித்தனா். வன்முறை ஏற்பட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு: ‘மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு ஏற்கெனவே திட்டமிட்டபடி ராம நவமி ஊா்வலத்தில் பாஜக வன்முறையைத் தூண்டிவிட்டுள்ளது. பாஜக ஏற்பாடு செய்திருந்த குண்டா்கள் காவல் துறையினருடனும் மோதலில் ஈடுபட்டனா்’ என்று முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments