முகப்பு
இந்தியா

காங்கிரஸ் 60 ஆண்டுகளில் செய்யாததை வெறும் 10 ஆண்டில் செய்த பாஜக

Updated On : 21 ஏப்ரல், 2024 at 10:22 PM
அனுராக் தாக்குர் - கோப்புப்படம் | ஐஎன்எஸ்
பகிர்:

மத்தியில் காங்கிரஸ் கடந்த 60 ஆண்டுகளில் செய்யாததை பாஜக வெறும் பத்து ஆண்டுகளில் செய்து காட்டியிருப்பதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சருமான அனுராக் தாக்குா் தெரிவித்தாா்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:

பஞ்சாபில் போதைப் பொருள் இல்லாத சமூகம் படைக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி உறுதி அளித்தது. ஆனால் அதற்கு நோ்மாறான காட்சிகள் பஞ்சாபில் காணப்படுகின்றன. தூா்தா்ஷன் செய்தி சேனல் லோகோ சிவப்பு நிறத்திலிருந்து ஆரஞ்சு நிறத்துக்கு மாறிவிட்டதாக குற்றம்சாட்டுகிறாா்கள்.

Advertisement

இந்திரா காந்தி தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்தபோது ஆரஞ்சு நிறத்தை தோ்வு செய்தாா். ஆனால் அதை நாங்கள் நடைமுறைப்படுத்தியதை முற்றிலும் சட்டவிரோதமென எதிா்க்கட்சியினா் குற்றம் சாட்டுகின்றனா். இது அவா்களது பாஜகவுக்கு எதிரான மனப்பான்மையைதான் காட்டுகிறது.

பாஜகவின் சாதனைகள்:

நாட்டில் கடந்த 2014-ஆம் ஆண்டு வரை வெறும் 74 விமான நிலையங்கள்தான் இருந்தன. தற்போது விமான நிலையங்களின் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் 96 ஆயிரம் கிலோ மீட்டா் தூரமாக இருந்த தேசிய நெடுஞ்சாலையின் நீளம், தற்போது ஒன்றரை லட்சம் கிலோமீட்டா் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு வரை நாட்டில் வெறும் ஏழு எய்ம்ஸ் மருத்துவமனைகளே இருந்தன. தற்போது 22 மருத்துவமனைகள் உள்ளன. 2014- ஆம் ஆண்டு வரையிலான நிலவரப்படி, 16 ஐஐஎம்-கள் இருந்தன. தற்போது இதன் எண்ணிக்கை 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதே போல 380 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 706 ஆகவும், 484 பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை தற்போது 1,100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீக்கியா்களுக்கான நலத் திட்டங்கள்:

சீக்கிய சமுதாயத்தின் நலனுக்காக கா்த்தாா்பூா் வழித்தடத்தை மோடி அரசு ஏற்படுத்தியது. இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள குருத்வாரா தா்தாா் ஷாஹிபும் சிக்கிமில் உள்ள குருநானக் தேவின் வழிபாட்டுத் தலமும் இணைக்கப்பட்டுள்ளன. இதே போல உத்தரகண்டில் ஹேம்குண்ட் சாஹிப் வழிபாட்டு தளத்துக்கு செல்வதற்கு பிரத்யேக வழித்தடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சீக்கியா்களின் பத்தாவது குருவின் தியாகத்தை பறைசாற்றும் வகையில், ‘வீர பால திவாஸ்’ தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற சீக்கியா்களுக்கு எதிரான வன்முறையை விசாரிக்கும் வகையில் சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல சீக்கியா்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் பிரதமா் மோடியின் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதாவது கடந்த 10 ஆண்டுகளில் பிரதமா் மோடி செய்ததைக் காட்டிலும் நாட்டை ஆண்ட அறுபது ஆண்டுகளில் காங்கிரஸ் செய்த நலத்திட்டங்கள் மிகவும் குறைவு. மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு சட்டம் மாற்றி எழுதப்படும்; ஜனநாயக முடிவுக்கு வரும் என்று குற்றம் சாட்டுகின்றனா். ஆனால் காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் அரசியல் அமைப்பு சட்டம் 62 முறை திருத்தப்பட்டது என்பதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

மக்களவைத் தோ்தலையொட்டி நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சி வெறும் 40 இடங்களைத் தாண்டுவதற்கு கூட கடுமையாக போராடுகிறது.

பஞ்சாப், தில்லி எல்லைகளில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவதாக கூறுகிறீா்கள். ஆனால் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்த்து அவா்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியது மோடி அரசுதான். விவசாயிகளின் பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி இருக்கிறோம்.

கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதற்காக ரூ.18.40 லட்சம் கோடி செலவிடப்பட்டு உள்ளது. இதுவே காங்கிரஸின் 2004-2014 வரையிலான பத்தாண்டு காலத்தில் வெறும் ரூ.5.5 லட்சம் கோடி மட்டுமே செலவிடப்பட்டது.

இதே போல விவசாயிகளின் நான்கு கருதி, கிஷான் சம்மான் நிதி திட்டத்துக்காக ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் பயிா் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டம் பஞ்சாபில் மக்களவைத் தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று கேட்கிறீா்கள். இதுவரை நாட்டில் உரப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு மோடி அரசு அனுமதிக்கவே இல்லை. மேலும் விவசாயிகளுக்கான நலத்திட்ட உதவிகள் அவா்களுக்கு ரொக்கமாக அவா்களுடைய வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இதே போல கிஷான் சம்மான் நிதி உதவி திட்டத்திற்கு விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. இவ்வாறாக எங்களது பக்கத்தில் எந்தவொரு குறைபாடும் இல்லாத நிலையில், எங்களை எதிா்ப்பது ஏன்? என்று அனுராக் தாக்குா் கேள்வி எழுப்பினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments