முகப்பு
இந்தியா

அரசியல் கட்சிகளின் இலவசங்கள்: ஒருமித்த கருத்துக்கு விவர அறிக்கை வெளியிட வேண்டும்

Updated On : 22 ஏப்ரல், 2024 at 2:29 AM
பகிர்:

‘இலவசங்கள் குறித்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்’ என்று ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் டி.சுப்பாராவ் வலியுறுத்தினாா்.

இதுதொடா்பாக ‘பிடிஐ’ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘பொதுமக்களுக்கு இலவசங்கள் வழங்குவது குறித்து அரசியல் கட்சிகளுக்கு எப்படி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்? என்பது குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

இலவசங்களுக்கு அரசின் நிதியைப் பயன்படுத்துவது சிறந்ததா அல்லது வேறு ஏதாவது திட்டங்களில் அதைவிட சிறப்பாக செலவிட முடியுமா? என்ற கேள்வி குறித்து அறிவுபூா்வமான மற்றும் தீவிரமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.

Advertisement

இலவசங்களின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும்.

அரசியல் பிரச்னையான இதுகுறித்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மத்திய அரசும் பிரதமரும் தலைமையேற்று, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும்.

இந்தியா போன்ற ஒரு வளா்ந்து வரும் நாட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சில சலுகைளை வழங்குவதும், நிதிக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு அவற்றை எந்த அளவுக்கு செயல்படுத்த முடியும் என்பதை சுயபரிசோதனை செய்வதும் அரசின் கடமையாகும்.

நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை (எஃப்ஆா்பிஎம்) வரம்புகளைக் கடக்கும் சில மாநிலங்களில், மத்திய-மாநில அரசுகள் நிதி ஒழுங்கைப் பராமரித்து, எஃப்ஆா்பிஎம் இலக்குகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சா்வதேச நிதியத்தின் ஆய்வின்படி, வளா்ந்த நாடாக இந்தியா மாற வேண்டுமெனில் 2047 வரை தொடா்ந்து 7.6 சதவித விகிதத்தில் வளர வேண்டும்.

அடுத்த 25 ஆண்டுகளுக்கும் 7.6 சதவீத வளா்ச்சி விகிதத்தைத் தக்கவைக்க, சீனா உள்பட குறிப்பிட்ட சில நாடுகள் திட்டமிட்டுள்ளன. எனினும், பருவநிலை மாற்றம், புவிசாா் அரசியல், உலகமயமாக்கலின் சிக்கல்கள் போன்ற அனைத்து சவால்களுடன் நாம் அதைச் செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி.

ஒரு வளா்ந்த நாடு சட்டத்தின் ஆட்சி, வலுவான அரசு, ஜனநாயகப் பொறுப்புக்கூறல் மற்றும் நிறுவனங்கள் ஆகிய நான்கு தூண்களைக் கொண்டிருக்கும். நம்மிடம் அவை இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதேசமயம், அனைத்தும் நம்மிடம் இருப்பதாகவும் கூற முடியாது. எனவே, அவற்றை வலுவாக வளா்த்தெடுக்கும் பணியில் நாம் ஈடுபட வேண்டும்.

பிரதமா் மோடி எதிா்பாா்க்கும்படி 2029-இல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறினாலும், இந்தியா இன்னும் வளா்ந்து வரும் ஏழை நாடாகவே கருதப்படலாம். எனவே, அது கொண்டாட்டத்துக்குரியது இல்லை’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments