புது தில்லியில் அரசு நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான தங்கும் விடுதியில் கடந்த 20 நாள்களில் 13 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புது தில்லியின் ரோஹினி பகுதியில் ஆஷா கிரண் என்ற பெயரில் மாற்றுத் திறனாளிகளுக்கான தங்கும் விடுதியை தில்லி அரசு நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த 20 நாள்களில் மட்டும் விடுதியில் தங்கியிருந்த குழந்தைகளில் 13 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஜூலை 17,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்; இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்தனர். அத்தகைய சூழ்நிலையில், மரணத்திற்கான உண்மையான காரணத்தை மறைக்க முயற்சி செய்யப்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்த விசாரணையை துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் தலைமையிலான விசாரணைக் குழு விசாரித்து வருகிறது.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்படி அதிகாரிகள் தெரிவித்ததாவது, ``கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரையில் விடுதியில் தங்கியிருந்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 12 வயது முதல் 20 வயதுடையவர்களே அடங்கியிருப்பர்.
இருப்பினும், உயிரிழப்பிற்கான சரியான காரணம் கண்டறியப்படாததால், உயிரிழந்தவர்களில் பிரேத பரிசோதனைக்கு பிறகே, உண்மையான காரணம் தெரிய வரும். அறிக்கை வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.
இரண்டு அல்லது மூன்று நாள்களில் அறிக்கை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீர் மாசுபாட்டினால்கூட உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதில், நீர் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா? என்பது குறித்து, தில்லி குடிநீர் வாரியத்திற்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது; நீர் சுத்திகரிப்பாளரை மாற்றுவது குறித்து கோரிக்கை விடப்பட்டுள்ளது” என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையமும் ஆஷா கிரண் விடுதியில் சோதனை மேற்கொண்டு வருகிறது.
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூறியதாவது, ``பல ஆண்டுகளாக, தில்லி அரசால் நடத்தப்படும் ஆஷா கிரண் விடுதி அனைத்து நம்பிக்கைகளையும் இழந்துவிட்டது.
இங்கு மக்கள் துன்பப்படுகிறார்கள்; இறந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், தில்லி அரசு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளவில்லை.
ஆம் ஆத்மி அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க எங்கள் குழுவை அனுப்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.