வயநாட்டில் 100 பேருக்கு நிலம் வழங்கும் பாபி செம்மனூர்!
நிலச்சரிவில் வீடுகளை இழந்தோர்க்கு நிலம் வழங்கவிருப்பதாக கேரள தொழிலதிபர் பாபி செம்மனூர் அறிவிப்பு
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சொந்த நிலத்தைத் தருவதாக தொழிலதிபர் பாபி செம்மனூர் கூறியுள்ளார்.
கேரளத்தின் திருச்சூரைச் சேர்ந்த பாபி செம்மனூர் ஜூவல்லர்ஸின் நிறுவனர் தொழிலதிபர் பாபி செம்மனூர், கேரளத்தின் வயநாட்டில் நிலச்சரிவால் வீடுகளை இழந்த 100 பேருக்கு புதிய வீடுகளைக் கட்டிக்கொள்ள, தனது சொந்த நிலத்தைத் தருவதாக அறிவித்துள்ளார்.
நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த பட்டியல் வெளியான பிறகு, அவர்களில் 100 பேருக்கு நிலம் அளிக்கப்படும்; வழங்கப்படும் நிலங்களில் வீடு கட்டுவதற்கும் உதவிகள் செய்யப்படும். தற்போது நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் முடிவுற்ற பிறகே கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இத்துயர சம்பவத்தில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கானோா் உயிரிழந்ததுடன் பலா் வீடுகளை இழந்து நிற்கின்றனா்.
நிலச்சரிவு நேரிட்ட இடங்களில் மீட்புப் பணிகளும், நிவாரணப் பணிகளும் ஒருங்கே நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து ஏழாவது நாளாக திங்கள்கிழமையும் மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகின்றன.
தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் உள்பட 1,500 பேர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ராணுவம், கடற்படை, வனத்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை, காவல்துறை என பல்வேறு துறை வீரர்கள் சுமார் ஆறு பகுதிகளில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.