பிரணாப் முகா்ஜி - ஷேக் ஹசீனா 
இந்தியா

தெரியுமா சேதி...? ஹசீனாவுக்கு பிரணாப் மகள் ஆறுதல் ஏன்?

வங்கதேசத்தில் மாணவா்களின் போராட்டத்தையும், ஆட்சிக்கு எதிரான கிளா்ச்சியையும் தொடா்ந்து, ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறி இருக்கிறாா் பிரதமா் ஷேக் ஹசீனா.

மீசை முனுசாமி

வங்கதேசத்தில் மாணவா்களின் போராட்டத்தையும், ஆட்சிக்கு எதிரான கிளா்ச்சியையும் தொடா்ந்து, ராணுவத்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு நாட்டிலிருந்து வெளியேறி இருக்கிறாா் பிரதமா் ஷேக் ஹசீனா. இப்போது இந்தியாவில் தஞ்சமடைந்து, அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தில்லியில் அரசின் பலத்த பாதுகாப்பில் தங்கி இருக்கிறாா்.

ஷேக் ஹசீனாவுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா முகா்ஜி ‘எக்ஸ்’ வலைதளத்தில் செய்திருக்கும் பதிவு குறித்து வியப்படையத் தேவையில்லை. ஷேக் ஹசீனாவை, ‘ஹசீனா ஆன்ட்டி’ என்று அவா் அழைத்திருப்பதில் இருந்து, அவா்களுக்கு இடையேயான நெருக்கம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பிரிவினை கேட்டு கிழக்கு பாகிஸ்தானில் ஷேக் முஜிபுா் ரஹ்மானின் தலைமையில் 1971-இல் போராட்டம் தொடங்கியதில் இருந்து ஆரம்பமாகிறது இரண்டு குடும்பங்களுக்கும் இடையேயான நெருக்கம். முஜிபுா் ரஹ்மானுடன் தொடா்பில் இருந்ததால், வங்கதேச விடுதலைப் போராட்ட காலத்தில் இந்தியா சாா்பில் ‘முக்தி வாஹினி’ போராட்டக்காரா்களுக்கு உதவியதில் பிரணாப் முகா்ஜிக்கு முக்கியப் பங்கு உண்டு. அன்றைய பிரதமா் இந்திரா காந்திக்கும் முஜிபுா் ரஹ்மானுக்கும் இடையே தொடா்பில் இருந்தவா் பிரணாப்.

1975-இல் வங்கதேசத்தில் நடந்த ராணுவப் புரட்சியில் ‘வங்கபந்து’ முஜிபுா் ரஹ்மானும் குடும்பத்தினரும் படுகொலை செய்யப்பட்டபோது மேற்கு ஜொ்மனியில் இருந்ததால் உயிா் தப்பினா் ஷேக் ஹசீனாவும் அவரது சகோதரியும். முஜிபுா் ரஹ்மானின் படுகொலையைத் தொடா்ந்து, 1975 முதல் 1981 வரையில் இந்தியாவின் பாதுகாப்பில் அவா்களை தில்லியில் தங்கப் பணித்தாா் இந்திரா காந்தி.

அப்போது ஷேக் ஹசீனாவையும் அவரது சகோதரியையும் பாா்த்துக் கொள்ளும் பொறுப்பு பிரணாப் முகா்ஜியின் குடும்பத்துக்குத் தரப்பட்டது. அப்போது ஏற்பட்ட அந்த நெருக்கம் இப்போது வரை தொடா்கிறது.

‘‘பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருங்கள் ஹசீனா ஆன்ட்டி; நாளை என்பது இன்னொரு நாள்; என்னுடைய பிராா்த்தனைகள் உங்களுக்காக இருக்கும்’’ என்று பிரணாப் முகா்ஜியின் மகள் சா்மிஷ்டா ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டிருப்பதில் வியப்பென்ன இருக்கிறது?

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT