வினேஷ் போகாட் 
இந்தியா

ஒலிம்பிக்: வினேஷ் போகாட் தகுதி நீக்கம்- 100 கிராம் கூடுதல் உடல் எடையால் நொறுங்கிய பதக்கக் கனவு

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

DIN

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

அவரது இந்தத் தகுதி நீக்கம், ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 100 கிராம் எடை வித்தியாசத்தால் வினேஷ் போகாட்டின் ஒலிம்பிக் பதக்கக் கனவு தகர்ந்தது.

பிரான்ஸில் நடைபெறும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் களம் கண்டுள்ள இந்தியர்களில், பல வீரர், வீராங்கனைகள் தொடக்க நிலையிலோ, அல்லது பதக்கச் சுற்றை நெருங்கியோ வெளியேறும் நிலையே தொடர்கிறது. ஒரு சில விளையாட்டுகளில் மட்டும் அவர்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைச் சந்தித்திருக்க, துப்பாக்கி சுடுதல் மூலமாக 3 வெண்கலப் பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன.

சாதித்த வினேஷ்: மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் செவ்வாய்க்கிழமை களம் கண்ட வினேஷ் போகாட், தனது முதல் சுற்றிலேயே நடப்பு சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி அசத்தினார். சர்வதேச அளவில் இதுவரை 82 மோதல்களில் களம் கண்ட சுசாகி எதிலுமே தோற்றதில்லை என்ற நிலையில், அவரை வீழ்த்தினார் வினேஷ் போகாட்.

அந்த வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ், அதில் உக்ரைனின் ஆக்சனா லிவச்சை 7-5 என்ற கணக்கில் வென்று, அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். அதிலும், 5-0 என்ற கணக்கில் கியூபா வீராங்கனை கஸ்மன் லோபûஸ வீழ்த்த, இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற வினேஷ், பதக்கத்தையும் உறுதி செய்தார்.

எட்டாக்கனி: இத்துடன் 3-ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டியில் களம் கண்டிருந்த வினேஷ், முதல் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தார். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெள்ளி அல்லது தங்கம் வெல்லப்போகும் முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை அவர் எதிர்நோக்கியிருந்தார்.

அதிர்ச்சி: வினேஷ் போகாட்டுக்கான இறுதிச் சுற்று புதன்கிழமை நடைபெற இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவிலேயே வழக்கமான பரிசோதனையின்போது வினேஷ் போகாட்டின் உடல் எடை அதிகரித்ததாகத் தெரிகிறது. அந்த எடை குறித்த உறுதியான தகவல்கள் இல்லாத நிலையில், சுமார் 2 கிலோ வரை அவரது எடை அதிகரித்திருந்ததாக அறியப்படுகிறது. அவர் 50 கிலோ எடையளவில் போட்டியிடுவதால், உடல் எடையை அந்த அளவுக்குக் கொண்டு வரவேண்டியிருந்தது.

இந்திய அணிக்கான தலைமை மருத்துவ அதிகாரி தின்ஷா பர்திவாலாவின் தகவல்படி, வினேஷ் போகாட்டின் கூடுதல் எடையைக் குறைப்பதற்காக செவ்வாய்க்கிழமை இரவு முழுவதுமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பிட்ட அளவே உணவு மற்றும் நீர் சேர்ப்பது, சைக்கிளிங், ஜாகிங், ஸ்கிப்பிங் என வியர்வையை அதிகமாக வெளியேற்றும் உடற்பயிற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளில் வினேஷ் ஈடுபட்டிருக்கிறார்.

நொறுங்கிய கனவு: இத்தனை போராட்டங்களுக்குப் பிறகு, புதன்கிழமை காலையில் இறுதிச் சுற்றுக்கு பல மணி நேரங்கள் முன்பாக விதிமுறைகளின்படி வினேஷ் போகாட்டின் எடை அளவு போட்டி நிர்வாகத்தால் சரிபார்க்கப்பட்டது. அப்போது, நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவைவிட அவரின் எடை 100 கிராம் அதிகமாக இருந்துள்ளது.

போட்டி விதிகளின்படி களம் காணும் மோதலுக்காக நிர்ணயிக்கப்பட்ட எடை அளவைவிட போட்டியாளர் அதிக எடையில் இருந்தால் இயல்பாகவே தகுதி நீக்கத்துக்கு ஆளாகிவிடுவார். அந்த வகையில், வினேஷ் போகாட்டும் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே, வினேஷ் போகாட்டின் 100 கிராம் எடையைக் குறைக்க சற்று கூடுதல் அவகாசம் கோரியும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இறுதியில் வினேஷின் சிகையை கத்தரிப்பது போன்ற கடைசிக் கட்ட முயற்சிகளும் அந்த 100 கிராம் எடைக் குறைப்புக்கு போதுமானதாக இல்லாமல் போனதாக மருத்துவ அதிகாரி தின்ஷா பர்திவாலா தெரிவித்தார்.

மருத்துவமனையில்...

எடைக் குறைப்பு முயற்சியாக மேற்கொண்ட கடுமையான உடற்பயிற்சிகள் காரணமாக வினேஷ் போகாட்டுக்கு நீர்ச்சத்து குறைவு ஏற்பட்டதை அடுத்து, ஒலிம்பிக் கிராமத்திலுள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா கூறுகையில், "வினேஷ் போகாட்டை மருத்துவமனையில் சந்தித்தேன். இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய அரசு, ஒட்டுமொத்த தேசம் அவருக்கு ஆதரவளிக்கிறது. அவருக்குத் தகுந்த மருத்துவ மற்றும் உணர்வுபூர்வ ஆதரவு அளிக்கப்படுகிறது.

வெள்ளிப் பதக்கம் கோரி முறையீடு...

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகாட், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக வியாழக்கிழமை காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

முன்னதாக, இறுதிப் போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவர் கேட்டிருந்தார். இந்நிலையில், 2-ஆம் இடம் பிடிப்பவருடன் இணைந்து தனக்கு கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என தனது கோரிக்கையை மாற்றியுள்ளார். இந்த தகவலை இந்திய ஒலிம்பிக் சங்கத்தைச் சேர்ந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.

பாரீஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால் அவற்றைத் தீர்த்து வைப்பதற்காக அங்கு சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தின் இடைக்கால அமர்வு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரையிறுதியில் வினேஷ் போகாட்டிடம் தோல்வியடைந்த கியூபாவை சேர்ந்த கஸ்மன் லோபஸ், இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சாரா ஹில்டேபிரான்டுடன் மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

"140 கோடி இந்தியர்களின் உள்ளத்தில் வினேஷ் போகாட்'

140 கோடி இந்தியர்களின் உள்ளத்தில் வெற்றியாளராக வினேஷ் போகாட் இருப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

ஒலிம்பிக் போட்டி இறுதிச் சுற்றில் இருந்து வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர், பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி உள்பட பலர் போகாட்டுக்கு ஆதரவாக "எக்ஸ்' தளத்தில் பதிவிட்டனர்.

குடியரசுத் தலைவர் முர்மு வெளியிட்ட பதிவில், "பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வினேஷ் போகாட் வெளிப்படுத்திய அசாதாரண ஆற்றல், ஒவ்வொரு இந்தியரையும் சிலிர்க்கவைத்து நாட்டைப் பெருமைப்படுத்தியது. 140 கோடி மக்களின் நெஞ்சங்களில் அவர் வெற்றியாளராக இருக்கிறார். வருங்காலத்தில் அவருக்குப் பல பாராட்டுகள் கிடைக்க வாழ்த்துகள்' என்றார்.

பிரதமர் மோடி: வினேஷ் போகாட் இந்தியாவின் பெருமை. அவர் ஒவ்வொரு இந்தியருக்கும் ஊக்கசக்தியாக விளங்குகிறார். அவருக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு வேதனை அளிக்கிறது. அவர் வலிமையுடன் திரும்பி வரவேண்டும். நாட்டு மக்கள் அவருக்கு துணை நிற்கின்றனர்.

ராகுல் காந்தி: வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது துரதிருஷ்டவசமானது. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இந்திய ஒலிம்பிக் சங்கம் வலுவான நடவடிக்கை மேற்கொண்டு போகாட்டுக்கு நீதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒட்டுமொத்த நாடும் போகாட்டுக்கு பக்கபலமாக துணை நிற்கிறது.

உலக மல்யுத்த அமைப்புக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கண்டனம்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உலக மல்யுத்த அமைப்பிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இந்தத் தகவலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா புதன்கிழமை தெரிவித்தார்.

மக்களவையில் மன்சுக் மாண்டவியா பேசுகையில், "வினேஷ் போகாட் தகுதி நீக்கம் தொடர்பாக உலக மல்யுத்த அமைப்பிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷாவிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

வினேஷ் போகாட்டுக்குத் தேûவான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்தது. ஒலிம்பிக் போட்டிக்காக அவருக்கு ரூ. 70.45 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது' என்றார்.

பாஜக தலைவர்களின் சொத்து அல்ல: காங்கிரஸ் எம்.பி. ஷஃபி பரம்பில் பேசுகையில், "வினேஷுக்கு அரசு மேற்கொண்ட செலவை குறிப்பிட்டது சரியல்ல. அந்தத் தொகை பாஜக தலைவர்களின் சொத்து அல்ல' என்றார்.

இதைத் தொடர்ந்து, வினேஷ் போகாட்டுக்கு அளிக்கப்பட்ட நிதியுதவியை அமைச்சர் மாண்டவியா குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

SCROLL FOR NEXT